September 18, 2020
சினிமா செய்திகள்

பாரதிராஜா பின் வாங்கியது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்தச் செய்தி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. பலர் இப்படி ஒரு சங்கம் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய சங்கத்தைத் தொடங்கி வைக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.

அதனால், பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……

நமது சங்கம் பல்வேறு நபர்களால், பல்வேறு காரணங்களால் செயலற்ற தன்மையில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். திரைப்படங்கள் எந்த விதப் பிரச்சினையின்றி தியேட்டரில் வெளிவர, தயாரிப்பாளர் நலன் காக்க சங்கம் சரியான பாதையில் பயணிக்க சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பலரது கோரிக்கை,அதற்கு சுய நலமற்ற நிர்வாகிகளை நாம் இனம் கண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

அதற்கு நமது சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

புதிய சங்கம் தொடர்பாகச் சில வாரங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் தொடக்கவிழா நடக்கவிருந்த நிலையில் பாரதிராஜா பின்வாங்கியது ஏன்? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

இப்படி ஒரு புதிய சங்கம் உருவாவதை விரும்பாத தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இச்சங்கத்துக்கு எதிராகப் பலரைப் பேச வைத்ததோடு தமிழக முதல்வர் அலுவலகம் வரை தொடர்பு கொண்டு அதைத்தடுத்து நிறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், புதிய சங்கத்தின் பொறுப்பாளர்கள் என்று ஒரு பட்டியல் வெளியானது. அப்பட்டியல், பாரதிராஜாவின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டதாகவும் அதனால் மிகவும் கோபமடைந்த பாரதிராஜா, முதல்வரைச் சந்திக்க மட்டும் நான் தேவை மற்ற விசயங்களை நீங்களே முடிவு செய்வீர்களா? என்று கத்தியதாக்வும் சொல்லப்படுகிறது.

கலைப்புலிதாணு தலைமையில் பலர் எதிர்ப்புத் தெரிவித்ததை பாரதிராஜா பொருட்படுத்தவில்லை என்றும் உடனிருப்பவர்கள் செய்த அதிகப்பிரச்ங்கித்தனம்தான் பாரதிராஜாவின் அறிக்கைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts