சினிமா செய்திகள்

குடித்துவிட்டு ரகளை செய்தேனா? – நடிகர் விஷ்ணுவிஷால் விளக்கம்

தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அந்தப் புகார் கடிதத்தில்….

சனவரி 23 ஆம் தேதி பின்னிரவு நேரத்தில் இரண்டாவது மாடியிலிருந்த இரண்டு வீடுகளிலிருந்து இரைச்சலாக உரத்த இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்டுத் தூக்கத்திலிருந்து விழித்தோம்.

அந்த வீட்டிலிருந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது நண்பர்களை அழைக்க நான் சென்றேன். ஆனால் அவர்கள் கதவைத் திறக்கவே இல்லை. இசையின் இரைச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

எங்கள் அபார்ட்மென்ட்டின் காவலரைச் சென்று பார்க்கச் சொன்னேன். அவர் சென்று கேட்டபோது கதவு திறந்து பதில் சொல்லப்பட்டாலும் இரைச்சல் நிற்கவில்லை. இதனால் காவல்துறையிடம் புகார் செய்தேன்.

என்னைப் போலவே மூன்றாவது மாடியில் வசிப்பவரும் இதனால் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். அவரும் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் வந்த பிறகு இதுகுறித்துப் பேச நான் இரண்டாவது மாடிக்குச் சென்றேன். அப்போது விஷ்ணு விஷால் ஆவேசத்துடன், அசிங்கமாகப் பேசினார். பேசுவதைப் புரிந்துகொள்ளாத நிலையில் அதிக குடிபோதையில் இருந்தார்.

விஷ்ணு விஷால் என்கிற விஷ்ணு குடவாலா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன். பேசிய விதம் அவர் ஒரு பிரபலம் என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் சட்டத்தின் மீது அவருக்கு இருக்கும் அதிகாரத்தைக் காட்டியது.

இப்படியான தவறுகளைச் செய்தாலும் சட்டம் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை காவல்துறை அதிகாரிகள் முன்னால் அவர் பேசிய அசிங்கமான வார்த்தைகளில் தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்கு முன்னரே இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் புகாரும், சட்ட ரீதியான நோட்டீஸும் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு குடியிருப்புவாசிகள் அனுப்பியுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தனது ட்விட்டர் பதிவில் மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது….

தினமும் குடித்தால் திடீரென சிக்ஸ் பேக் வந்துவிடாது. நீங்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். நீண்ட நாட்களுக்கு மதுவிலிருந்து தள்ளி இருக்க வேண்டும். சிலருக்கு இதன் பின்னால் இருக்கும் விஷயம் புரிவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts