Uncategorized விமர்சனம்

விஷமக்காரன் – திரைப்பட விமர்சனம்

மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது.

அதன்பின் நாயகனுக்கு இன்னொரு காதல். அது கல்யாணத்தில் முடிகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையில் வருகிறார் முன்னாள் காதலி. அவர் வந்ததால் மனைவிக்கு நாயகன் மேல் சந்தேகம். அதற்காக அவர் துப்பறியும் வேலைகளில் ஈடுபடுகிறார்.

கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லும் படம்தான் விஷமக்காரன்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி).நாயகனாக நடிப்பதற்காக ரொம்பவும் மெனக்கெடாமல் இயல்பாக நடித்துள்ளார்.

வியின் மனைவியாக நடித்திருக்கும் அனிகா விக்ரமன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.கணவனைத் துப்பறியும் நேரத்தில் வெளிப்படும் அலாதியான ஆர்வம் சிறப்பு.

முன்னாள் காதலியாக நடித்திருக்கும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி, தன் தனித்தன்மையைப் பேணிக்காக்கப் போராடுவதும் அது நடக்காமல் போனதால் ஆவேசமாவதும் சில வருடங்களில் ஆவேசம் அடங்கி மெனமையாவதும் ஆகிய எல்லா உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்துகிறார்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜே.கல்யாண், கதைக்களத்துக்குத் தேவையான வண்ணமயமான இடங்களைத் தேர்வு செய்து அவற்றை அழகாகக் காட்டுகிறார்.

கவின்-ஆதித்யா இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை நன்று.

படத்தொகுப்பு செய்திருக்கும் எஸ்.மணிக்குமரன் நாயகன் நாயகி ஆகியோரின் பேச்சுகளில் மயங்கி அப்படியே விட்டுவிட்டார் போலும்.காதுகள் வலிக்குமளவுக்குப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்.

யாரும் பின்பற்றக்கூடாத புத்திசாலித்தனத்தைத் திரைக்கதையாக்கியிருக்கிறார் வி. பேச்சு பேச்சு அதிலும் பாதிக்கு மேல் ஆங்கிலத்தில் பேச்சு என்பது திரைப்படத்துக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்தால் நல்லது.

ஆனாலும் கடைசி சில நிமிட சுவாரசியம் படத்துக்குப் பெரும் பலம்.

Related Posts