September 22, 2019
சினிமா செய்திகள்

நடிக்க வந்து 15 ஆண்டுகள் – என்ன செய்திருக்கிறார் விஷால்?

2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது. 

அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது. 

முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் விஷால். ஆனாலும் அப்படம் பொருளாதார ரீதியாக நட்டம். 

ஆனால் இரண்டாவது படத்திலேயே வெற்றி நாயகனானார் விஷால். இயக்குநர் லிங்குசாமியின் சண்டக்கோழி படம் பெரிய வரவேற்பையும் வசூலையும் ஒருங்கே பெற்று விஷாலை முக்கியமான கதாநாயகனாக்கியது.

அதற்கடுத்து தருண்கோபி இயக்கத்தில் விஷால் நடித்த திமிரு படமும் வெற்றியடைய தமிழ்த்திரையுலகில் நிரந்தர இடம் பிடித்தார் விஷால்.

அக்காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய்யே விஷாலின் இந்த வெற்றிகளால் அச்சப்பட்டார்,
 
அதன்பின் வரிசையாகப் படங்கள் சிலது வெற்றி சிலது தோல்வி என்றாலும் பயணத்தில் தடையில்லை.

பாலா இயக்கத்தில் அவர் நடித்த அவன் இவன் படம் விஷாலின் நடிப்புத் திறமையைப் பறைசாற்றியது.

2013 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்த மதகஜராஜா படம் இன்னும் வெளிவரவில்லை. அப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற நிறுவனத்தைத் தொடங்கி பல படங்களைத் தயாரித்தார். 
அதனால் கடன் சிக்கலிலும் சிக்கினார்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான ஹரி, சுந்தர்.சி, சுசீந்திரன், /மிஷ்கின் உட்பட பல இயக்குநர்களுடன் பணியாற்றினார்.

நடிகர்சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் அரசியல் ஆர்வம் ஆகியனவற்றால் அவரது வெற்றிப்பயணத்தில் சில தடைகள் வந்தன. 

அவற்றைத்தாண்டி கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் அவரை மீண்டும் வெற்றி நாயகனாக்கியது.

இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் விஷாலின் முதல்படம் செல்லமே வெளியானது. இன்றோடு அவருடைய திரைப்பயணத்தில் 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

பல ஏற்ற இறக்கங்கள் விமர்சனங்கள் எதிர்ப்புகள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி அவருடைய பயணம் தொடருகிறது.

சிவப்பாக அழகாக இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகனாக முடியும் என்கிற கருத்தை உடைத்து கறுப்பாக இருப்பவரும் வெற்றி நாயகனாக முடியும் என்பதை நிரூபித்தவர் ரஜினிகாந்த். அடுத்த தலைமுறையில் அதை உடைத்து வெற்றியடைந்திருப்பவர் விஷால்.
 
விஷாலின் திரையுலக 15 ஆம் ஆண்டு நிறைவை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

Related Posts