சினிமா செய்திகள்

கலைமாமணி விருது விழாவில் விஜய்சேதுபதி பங்கேற்காதது ஏன் தெரியுமா?

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக அவ்விருது வழங்கப்படாமல் இருந்தது. அண்மையில் பல ஆண்டுகளுக்கான விருதுகள் ஒன்றாக அறிவிக்கப்பட்டன.

அவ்விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) மாலை நடந்தது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும் விருது வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் விருது அறிவிக்கப்பட்டிருந்த விஜய்சேதுபதி கலந்துகொள்ளவில்லை.

அதனால் அவர் விருதைப் புறக்கணித்தார் என்கிற பேச்சுகள் எழுந்தன.

ஆனால், அவர் முதல்வர் கலந்து கொண்ட விழா முடிந்த பின்பு அங்கு சென்றிருக்கிறார். அதனால் இயல் இசை நாடக மன்றத்தலைவர் தேவாவிடம் அரசு அதிகாரிகள் முன்னிலையில் விருதைப் பெற்றுக்கொண்டார்.

சென்னையில் படப்பிடிப்பில் இருந்த அவர் படப்பிடிப்பிலிருந்து கிளம்பி கலைவாணர் அரங்கத்துக்கு வருவதற்குள் விழா முடிந்துவிட்டதாம்.

அதனால் அவர் தேவாவைச் சந்தித்து விருதைப் பெற்றுக்கொண்டாராம்.

அவர் விழாவில் கலந்து கொள்ளாததற்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலே காரணம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts