Uncategorized

விஜய் வீட்டில் சோதனை – அரசியல்தலைவரின் சந்தேகம்

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் வெற்றியடைந்தது. அந்தப்படத்தின் வசூல் ரூ.300 கோடி எனக்கூறப்பட்ட நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்ஸியர் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், மாஸ்டர் படத்துக்காக நெய்வேலியில் படபிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த வருமான வரித்துறையினர் அவரை சென்னை அழைத்து வந்தனர்.

விஜய் வீட்டில் நடந்த சோதனை முடிந்த நிலையில் அவர் நேற்று மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால், அங்கே பாஜகவினர் முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து இந்திய பொதுவுடைமைக் கட்சி செயலாளர் இரா.முத்தரசன் இன்று விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது….,

வருமான வரித் துறை சோதனை மூலம் நடிகர் விஜய்யை படியவைக்க பாஜக முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அது நடக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.

ஏனென்றால், ஒரு படத்துக்கு ரூ.100 கோடி ரூ.150 கோடி எல்லாம் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படும் ஒரு நடிகரின் வருமான வரி தொடர்பாகவும் அவர் தனது பணத்தை வட்டிக்கு விடுவது தொடர்பாகவும் சில சர்ச்சைகள் எழுகிறது. அந்த நடிகர் அடுத்த நாளே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆதரிக்கிறார். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

ஆனால், நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்புத் தளத்திலும் தகராறு செய்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விஜய்யை பாஜக படியவைக்க முயல்கிறதோ எனத் தோன்றுகிறது. படப்பிடிப்புத் தளத்தில் பாஜகவினர் ரகளை செய்தது கடும் கண்டனத்துக்குரியது.

அதேபோல், திரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் மதுரை அன்புச்செழியனிடத்தில் இருப்பது தமிழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ‘ப’ எழுத்தில் தொடங்கும் முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் ‘உ’ எழுத்தில் தொடங்கும் பிரமுகரின் பணம் எனக் கூறப்படுகிறது. வருமானவரித் துறை நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காக அல்லாமல் உண்மையிலேயே சோதனை நடத்தியிருந்தால் யார் அந்த ப? யார் அந்த உ? எனக் கூற வேண்டாமா?”

இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related Posts