விமர்சனம்

வடசென்னை – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலையில் படம் தொடங்குகிறது. செத்தவர் யார்? எதற்காக அவரைக் கொன்றார்கள்? என்கிற கதையை திரைக்குப் பின்னே இருந்து ஒரு குரல் சொல்லிக்கொண்டேயிருக்க அதற்கேற்ப காட்சிகள் வருகின்றன.

நாயகன் தனுஷ், நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, பவன், ஆடுகளம் கிஷோர்,டேனியல் பாலாஜி,தினா, மட்டுமின்றி ஏராளமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி மூச்சுத் திணற வைக்கிறார்கள்.

ஒருவிநாடி அசந்தாலும் இவர் யார்? யாருக்கு நண்பன்? யாருக்கு எதிரி? என்று எதுவும் புரியாமல் பேய்முழி முழிக்கவேண்டியிருக்கும். அவ்வளவு அடர்த்தியான அறிமுகங்கள்.

அதற்கு நடுவே வடசென்னை பகுதி மற்றும் சிறைச்சாலைக்காட்சிகள். இங்கிருப்பவர் அங்கிருக்கிறார். அங்கிருப்பவர் இங்கிருக்கிறார். ஏன் இருக்கிறார்? எதற்கு இருக்கிறார்? என்பனவற்றைத் தெரிந்துகொள்வதற்குள் நாக்குத் தள்ளுகிறது..

மொத்தப்படத்தையும் பார்த்த பிறகு, வடசென்னையில் அமீர் ஒரு தாதா. அவருடன் இருக்கும் நான்குபேர் அவருக்கு இரண்டகம் செய்கிறார்கள். அதன்பின் அவர்களுக்குள் மோதல். அதில் யார் யாரை வெல்கிறார்? என்பதுதான் படம் என்று தெரிகிறது.

இப்படத்தில் கதை என்ன? என்று கேட்காமல் கதாபாத்திரங்களை ரசிக்கத் தொடங்கினால் தப்பிக்கலாம்.

யார் வாய் திறந்தாலும் கெட்டவார்த்தைகள் கொட்டுகின்றன. இதில் மிகையில்லை,வடசென்னை வாழ்க்கைப் பதிவு என்று சொன்னால் அமீர் ஆண்ட்ரியா படுக்கையறையை மட்டும் பாதி காட்டியது ஏன்? அந்த வாழ்க்கையையும் பதிவு செய்யலாமே?

தனுஷ் தொடங்கி கடைக்கோடி நடிகர் வரை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா,ஆண்ட்ரியா, அமீர் ஆகியோருக்கு இப்படம் பெரிய பெயர் வாங்கித்தரும்.

தனுஷ், ஐஸ்வர்யாவைப் பின்தொடரும் காட்சிகள் அதகளம்.அவர்கள் காதல் வடசென்னை காதல் இல்லை வாஷிங்டன் காதல்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு வடசென்னையின் இண்டு இடுக்குகளையெல்லாம் காட்சிப்படுத்தியிருக்கின்றன. காட்சிகள் எதார்த்தமாக அமைய தேவையான வெளிச்சம் மற்றும் இருளைப் பயன்படுத்தியிருப்பதில் மெனக்கெடல் தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.

எம்,ஜி.ஆர் மரணம் ராஜீவ்காந்தி மரணம் ஆகியனவெல்லாம் கதை நடக்கும் காலகட்டத்தில் வந்துபோகின்றன.

எம்ஜிஆர் ஆட்சியிலும் ராஜீவின் மரணத்துக்குப் பிறகான ஜெயலலிதாவின் முதல் ஆட்சியிலும் வடசென்னை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

அம்மண்ணை தரகுமுதலாளிகளிடமிருந்து காப்பாற்றப் போராடும் காட்சிகள் எட்டுவழிச்சாலை எதிர்ப்புப் போராட்டங்களை நினைவுபடுத்துகின்றன.

எந்த ஊருக்குப் போனாலும் சொந்த ஊர் இருக்கிறது என்கிற நம்பிக்கை வேண்டும் என்பது உட்பட மக்களுக்காகப் பேசும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

படத்தில் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சிங்காரவேலர் எனும் பொதுவுடைமைவாதியின் பெயரில் மன்றம் திறக்கிறார் அமீர்.

இப்படி, வடசென்னை மக்கள் வாழ்வியல், தமிழகம் முழுமைக்குமான அரசியல் ஆகியவை உட்பட நிறைய விசயங்களைப் பேசுகிறார் வெற்றிமாறன். எதிலும் முழுமையில்லை தெளிவுமில்லை.

படம் முடிந்து வரும்போது வடசென்னையில் ஒரு நல்லவர் கூட இல்லை என்பதும் எல்லோரும் கனியிருப்பக் காய்கவர்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது.

Related Posts