சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் ஓடிடியில் வெளியாகிறது ?

புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏப்ரல் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அந்தத் தேதியில் மறைந்த ஜனநாதன் இயக்கியுள்ள இலாபம் படத்தை வெளீயிடுகிறோம் அதனால் நீங்கள் அந்தத் தேதியை விட்டுக்கொடுங்கள் என்று அப்படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் துக்ளக் தர்பார் தயாரிப்பாளர் விட்டுக் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், இப்போது துக்ளக் தர்பார் படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார்களாம். அது தொடர்பாக முன்னணி இணைய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அது வெற்றிகரமாக முடிவடைந்ததாம்.

பெரிய விலை என்பதால் நேரடியாக இணையத்தில் வெளியிடத் தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகாமல் இருப்பதால் அறிவிப்பு வரவில்லை என்கிறார்கள்.

இதுதொடர்பாக, தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டால், அப்படி எல்லாம் எதுவும் இல்லை, இலாபம் முன்னால் வந்ததால் எங்கள் படம் தள்ளிப்போகிறது என்கிறார்.

Related Posts