விமர்சனம்

டிக் டிக் டிக் – திரைப்பட விமர்சனம்

200 டன் எடையுள்ள விண்கல் ஒன்று இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் விழப்போகிறது. அது விழுந்தால் இந்தியாவின் வரைபடமே மாறிவிடும், 4 கோடி பேர் மடிவார்கள் என்கிற நிலை.

இதை இந்திய விண்வெளி ஆய்வு மையம் எவ்வாறு கையாள்கிறது? என்பதுதான் டிக் டிக் டிக்.

இந்த படபடப்பான சூழலை மட்டும் வைத்துக்கொண்டு தமக்குத் தெரிந்த அளவில் தாறுமாறாக விளையாடியிருக்கிறார்கள்.

நல்லவன், மகன் மீது அளவுகடந்த பாசம் கொண்டவன், பிறருக்கு உதவும் மனம் கொண்டவன் என்று ஏகப்பட்ட நற்சான்றிதழ் வைத்திருந்தாலும் சட்டத்தின் பார்வையில் திருடனாக சிறையிலிருக்கும் ஜெயம்ரவி, பூமியில் மோதும் விண்கல்லை இரண்டாக உடைக்கும் ஏவுகணையை விண்வெளி சென்று திருடும் வேலைக்குப் பொறுப்பேற்கிறார்.

சிரிக்க வேண்டாம்.

விண்வெளி ஆய்வு மையம் எப்படி இருக்கும்? அங்கு எப்படியெல்லாம் நடக்கும்? என்பதெல்லாம் நமக்கு தெரியாது என்பதால் இவர்கள் சொல்வதுதான் உணமை என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், வின்செண்ட்அசோகன், ரமேஷ்திலக், அர்ஜூனன் ஆகிய ஐந்து பேர் அடங்கிய குழு, விண்வெளிப்பயணம் மேற்கொண்டு, ஏவுகணையைக் கடத்தி வருகிற வரை விறுவிறுப்பாகச் செல்கிறது படம்.

ரிச்சி தெருவில் இருந்துகொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது நடுவரின் முடிவை மாற்றுவது தொடங்கி ரமேஷ்திலக் அர்ஜூனன் ஆகியோர் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்கும் ரகம். எப்படி? இப்படி நடக்கும்? என்கிற கேள்வி மட்டும் கேட்கக்கூடாது.

மகன் மீது கொண்ட பாசத்தால் எதையும் செய்யக்கூடிய வேடம் ஜெயம்ரவிக்கு. அதை யாரும் கேள்விக்குள்ளாக்கிவிடக்கூடாது என்பதற்காக ஜெயம்ரவியின் சொந்தமகன் ஆரவ்வை நடிக்கவைத்திருக்கிறார்கள்.

ஊர் கண்ணெல்லாம் அவன் மேலதான் திருஷ்டி சுத்திப்போடுங்க ஜெயம்ரவி.

எடுத்துக்கொண்ட விசயத்திலிருந்து சற்றும் தடம் மாறக்கூடாது என்பதற்காக நிவேதாபெத்துராஜ் காதல் கனவு காணவில்லை, காதல் பாடலும் இல்லை. இருந்தாலும் அடியே அழகேவை விண்வெளி உடைகொண்டு படம் முழுக்க மறைத்து வைத்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்த்திரையுலகக் கதாநாயகர்களால் உலகில் சாதிக்க முடியாத விசயம் எதுவுமே இல்லை என்பது ஏற்கெனவே நிரூபணமானது.

பூமி மட்டுமல்ல விண்வெளியிலும் அவர்களால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்று இந்தப்படம் சொல்லியிருக்கிறது.

இப்படி ஒரு படம் எடுக்கலாம் என்றுசிந்தித்த இயக்குநர் சக்தி செளந்தரராஜனை பாராட்டலாம்.

Related Posts