விமர்சனம்

துப்பாக்கிமுனை – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயர் துப்பாக்கிமுனை, படத்தில் நாயகன் விகரம்பிரபுவுக்குக், குற்றவாளிகளை விசாரணையின்றிச் சுட்டுக்கொன்று தீர்க்கும் காவல் அதிகாரி வேடம் என்றதும் படம் முழுக்க ரத்தம் தெறிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு வருவது இயற்கை.

அந்த எதிர்பார்ப்புடன் சென்றால், நாம் நினைத்ததைக் கொஞ்சம் கொடுத்துவிட்டு நினைக்காததை நிறையக் கொடுத்திருக்கிறார்கள்.

மும்பையில் காவலதிகாரியாக இருக்கும் விக்ரம்பிரபு, இளம்பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வடநாட்டு மாவோயிஸ்ட் இளைஞனைச் சுட்டுக்கொல்லும் வேலைக்காக இராமேஸ்வரம் வருகிறார்.

அந்த ஒரு நாளில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதுதான் படம்.

துடிப்பான காவல்திகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விக்ரம்பிரபு.

கண்ணெதிரில் காதலியின் கழுத்தில் கத்தி வைத்திருக்கும் நேரத்தில் பதறாமல் சிதறாமல் நிற்பதும், நான் இல்லைன்னா என் அம்மாகிட்ட என் அன்பை சொல்லிவிடு என்று கலங்கி நிற்பதிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார் விக்ரம்பிரபு.

நாயகியாக ஹன்சிகா. ஒரு காதல் காட்சி இல்லை காதல் பாடலும் இல்லை அப்புறம் எதற்கு ஹன்சிகா? ஆனாலும்
விக்ரம்பிரபு போகிறபோக்கில் அதிரடியாகக் காதலைச் சொல்லும்போது புரிந்து நாணும் காட்சியில் ஜொலிக்கிறார்.

எம்.எஸ்,பாஸ்கர் வேலராமமூர்த்தி ஆகியோருக்குப் படத்தில் முக்கிய வேடங்கள். வேலராமமூர்த்தி தோற்றத்தில் கம்பீரம் காட்டுகிறார். எம்.எஸ்.பாஸ்கரின் செயலில் கம்பீரம்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக நடித்திருக்கும் அபிராமியின் முகம் கண்களுக்குள்ளேயே நிற்கிறது.

வடநாட்டு இளைஞன் வேடத்தில் நடித்திருக்கும் வானொலி வரவு மிர்ச்சிஷாவுக்கு நல்ல வேடம். நன்றாகச் செய்து கவனிக்க வைக்கிறார்.

படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவாளர் ராசாமதி. இவ்வளவு ஆண்டுகள் திரையில் நாம் பார்த்திராத ராமேஸ்வரத்தை நமக்குக் காட்டியிருக்கிறார். அகன்ற திரையில் ஊரின் அழகைக் காட்டியது மட்டுமல்ல நெருக்கமான காட்சிகளிலும் அவருடைய ஒளியமைப்பு கதையின் துடிப்பை உணர்த்துகிறது.

முத்துகணேஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பொருத்தம்.

ராமேஸ்வரத்தில் சுட்டுக்கொல்ல அழைத்துச் செல்லும் இளைஞனை உள்ளூர் காவல்துறை மற்றும் தாதாக்களிடமிருந்து காப்பாற்ற விக்ரம்பிரபு செய்யும் உத்தி புத்திசாலித்தனமாக அமைந்து படத்தை சுவாரசியமாக்குகின்றன.

வில்லனாகக் காட்டப்படும் வடநாட்டு இளைஞனை மாவோயிஸ்ட் என்றதுமே, இயக்குநர், மணிரத்னத்தின் உதவியாளர் ஆச்சே அவர் இப்படித்தான் சிந்திப்பார் என்று நினைக்கத்தோன்றுகிறது.

ஆனால் நினைத்ததை எல்லாம் பொய்யாக்கி வேறு முகம் காட்டியிருக்கிறார் இயக்குநர். அது சரியா? தவறா? என்பது விவாதத்துக்குரியது.

சென்னையில் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் செயல் மற்றும் அவர் பேசும் வசனங்கள் , ராமேஸ்வரம் கடலில் கரையும் துப்பாக்கி (அந்தக்காட்சி மிகச்சிறப்பு) ஆகியனவற்றால் உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் தினேஷ்செல்வராஜ்.

இப்படத்தில் சொல்லப்படும் கருத்தை ஏற்றுக்கொண்டு வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கும் விக்ரம்பிரபுவுக்கு இது முக்கியமான படம் என்பதில் மாற்றமில்லை.

Related Posts