விமர்சனம்

சுல்தான் – திரைப்பட விமர்சனம்

பிறக்கும்போதே அம்மாவை இழக்கும் கார்த்தி, அம்மா போல் தன்னை வளர்த்தவர்களைப் பாதுகாக்கப் போராடுவதுதான் சுல்தான்.

வழக்கமான அட்டகாசச் சிரிப்புடன் அறிமுகமாகும் கார்த்தி, படம் முழுக்க இறங்கி விளையாடியிருக்கிறார். இடைவேளை நேரத்தில் வருகிற சண்டைக்காட்சியில் விஸ்வரூபம் எடுத்து மிரள வைக்கும் அவர் நாயகி ராஷ்மிகாவைப் பார்த்து மிரளும்போது ரசிக்க வைக்கிறார்.ஒரு பெரும்பழியைச் சுமந்து கொண்டும் தம்மைச் சேர்ந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் தீவிரமாக இயங்கும் பொறுப்பைப் பொறுப்பாக வெளிப்படுத்துகிறார்.

இவ்வளவு அழகா? என்று பாடல் போட்டு நாயகி ராஷ்மிகா மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த அளவுக்குப் படத்தில் இல்லை.

வித்தியாசமான தோற்றத்தில் வரும் நெப்போலியன், ஒரே காட்சியில் வரும் அபிராமி, ஹரீஷ்பேரடி, பொன்வண்ணன், சிங்கம்புலி, மயில்சாமி,எம்.எஸ்.பாஸ்கர் என படம் முழுக்க பெரும் நடிகர் பட்டாளம். இதனால் யோகிபாபு,சதீஷ் போன்ற நகைச்சுவையாளர்களும்  தனித்துத் தெரியாமல் கூட்டத்தில் கரைந்து போகிறார்கள்.

அண்ணன்களாக வருகிற நூறு பேர் திரையை நிரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

கேஜிஎஃப் ராமச்சந்திர ராஜு மற்றும் நவாப்ஷா ஆகியோர் வில்லன்கள். முன்னவர் செயலில் மிரட்டினால் பின்னவர் பாரவையாலே மிரட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு கூட்டம் என்பதால் தடுமாறியிருக்கிறார்.ராஷ்மிகாவின் மீதான ஈர்ப்பு குறைய அவரும் ஒரு காரணம்.

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசைத்திருக்கும் யுவன் தன் இருப்பைப் பதிவு செய்யக் கூடுதலாக உழைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் பாக்யராஜ் கண்ணன், கத்தி எடுத்தவர்களைக் கலப்பை பிடிக்க வைக்கும் நல்ல கதையை எழுதி அதைத்  திரைக்கதையாகுவதில் சறுக்குகிறார். முதல்பாதி போல் இரண்டாம்பாதி இல்லாதது குறை.

வியாபார மதிப்பில் முன்னேற உதவும் வெகுமக்கள் ரசிக்கக் கூடிய நாயகனாகவும்,  விவசாயத்திற்கெதிரான பன்னாட்டு நிறுவனங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் சமுதாயச் சிந்தனையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி தன்னை நிறுவியதோடு படத்தையும் பாதுகாக்கிறார் கார்த்தி.

Related Posts