சினிமா செய்திகள்

டான் டிரெய்லர் சர்ச்சை – சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் நடித்துள்ளனர்.

மே 13 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது.சிவகார்த்திகேயன் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த முன்னோட்டம் அதிலுள்ள சில காட்சிகளால் சர்ச்சைக்கும் ஆளானது.

அதில், ஆசிரியர்களைத் துன்புறுத்துவது எப்படி? என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் படித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியும், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் கைபேசியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ஏற்கெனவே மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் போன்ற வெகுஜன இரசிகர்களைக் கொண்ட நடிகர் இப்படிப்பட்ட காட்சியில் நடித்தால் அது மேலும் மாணவர்களைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, டிரெய்லரில் வருகிற ஒரு விநாடிக்காட்சியை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிடாதீர்கள், முழுப்படத்தையும் பார்க்கும்போது உண்மை புரியும் என்று கூறியுள்ளார்.

Related Posts