கட்டுரைகள்

ஏழாண்டுகளில் சிகரம் எட்டிய சிவகார்த்திகேயன் – பிறந்தநாள் சிறப்பு

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான மெரினா சிவகார்த்திகேயன் நடித்த முதல்படம். அடுத்தமாதமே அதாவது மார்ச் 30, 2012 அன்று தனுஷ் உடன் நகைச்சுவை நடிகராக அவர் நடித்திருந்த 3 வெளியானது. மூன்றுமாதங்கள் கழித்து ஜூன் 1,2012 இல் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது.

இம்மூன்றில் அவர் நாயகனாக நடித்த இரண்டுபடங்களுமே வெற்றி. 3 படம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது.

அடுத்த ஆண்டில் கேடிபில்லா கில்லாடிரங்கா, எதிர்நீச்சல் ஆகிய இரண்டுபடங்களும் வெற்றியடைந்த நிலையில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.

நடித்த எல்லாப்படங்களும் வெற்றி என்பதோடு வசூலிலும் சாதனை படைத்துவிட்டதால் அவருடைய சந்தைமதிப்பு பன்மடங்கு எகிறியது.

அடுத்தபடமான மான்கராத்தே படத்தில் அவருக்கு ஹன்சிகா ஜோடியானார். அந்தப்படத்தின் படத்தின் தயாரிப்புச்செலவும் பெரிதானது. சிவகார்த்திகேயனை நம்பிச் செலவு செய்யலாம் என்கிற எண்ணத்தை அந்தப்படமும் வெற்றியடைந்து உருவாக்கியது.

அதன்பின் வந்த காக்கிச்சட்டையும் ஓகே. அதற்கடுத்து வெளியான ரஜினிமுருகன் அவருடைய முந்தையவசூலையெல்லாம் தாண்டியது.

அதன்பின் வந்த ரெமோ,ரஜினிமுருகனைவிட அதிக வசூல், அடுத்து வெளியான வேலைக்காரன், ரெமோவைவிட அதிக வசூல் என்று முன்னேறினார்.

கடந்த ஆண்டு வெளியான சீமராஜா சரியாகப் போகவில்லை என்று சொல்லப்பட்டாலும் அப்படத்தின் தமிழக வசூல் மட்டும் சுமார் 25 கோடி என்று சொல்லப்படுகிறது.

இது பெயர் சொல்லக்கூடிய பெரிய கதாநாயகர்களின் வெற்றிப் பட வசூலைக் காட்டிலும் அதிகம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

தயாரிப்பாளராகவும் மாறி அவர் தயாரித்த கனா திரைப்படம், சமுதாய அவலங்களைச் சுட்டியதோடு இளைய சமுதாயத்துக்கு ஊக்கம் தரும் நல்ல கருத்துகளைச் சொன்னது. வசூலிலும் வெற்றி பெற்றது.

கனாவைத் தொடர்ந்து இன்னொரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல், மே 1,2019 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்து, ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. அதற்கடுத்து, இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்கிறார்.

திரைத்துறைக்கு வந்து ஏழாண்டுகளில் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராகத் திகழும் சிவகார்த்திகேயன் இன்று தனது 35 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமாவலை cinemavalai.com இணையதளம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Related Posts