September 18, 2020
விமர்சனம்

சகுந்தலாதேவி – இந்தித் திரைப்பட விமர்சனம்

இந்திய கணித மேதைகளின் வரிசையில் உலகமே கொண்டாடிய ஒருவர் சகுந்தலா தேவி. ஆரியபட்டர், இராமானுஜரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கணித மேதை சகுந்தலா தேவி. முறையாக பள்ளிக் கல்வியைக் கற்காதவர் ஆனால், கணிதத்தில் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டியவர்.

சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வித்யாபாலன் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது ‘சகுந்தலா தேவி’ திரைப்படம்.

முதல் காட்சி இதுதான்… சகுந்தலா தேவியின் மீது மகள் அனுபமா இலண்டனில் வழக்குத் தொடர்கிறார். கதையானது நிகழ்காலமும், இறந்தகாலமுமாக மாறி மாறி வருகிறது.

அதாவது, சகுந்தலா தேவி எனும் மேதை எப்படி உருவானார் என்பதில் தொடங்கி ஏன் மகளே அம்மாவின் மீது வழக்குத் தொடர்கிறார் என்பதில் வந்து கதை முடிகிறது.

யார் இந்த சகுந்தலா தேவி? பெங்களூரில் பிறந்து வளர்கிறார். சிறு வயதில் சகுந்தலாவின் கணித திறமை சுற்றி இருப்பவர்களை வியக்க வைக்கிறது. வறுமையில் வாடும் குடும்பம் என்பதால், தந்தை இவரை ஒவ்வொரு பள்ளிக்காக அழைத்துச் சென்று கணித நிகழ்வு ஒன்றை மேற்கொள்கிறார். அதிலிருந்து வருமானமும் வருகிறது. இதனால் குழந்தைப் பருவத்தை இழக்கும் சகுந்தலா, குடும்பத்தின் மீது வெறுப்புக் கொள்கிறார்.

குறிப்பாக, அடிப்படையான இந்திய குடும்பப் பெண்ணாக, கணவரை எதிர்க்கத் துணியாத அவரின் அம்மாவின் மீது கோபம் கொள்கிறார். பின்னர், சில காரணங்களால் இந்தியாவில் இருந்து, லண்டனுக்கு செல்கிறார். அதன்பிறகு சகுந்தலா தேவியின் வாழ்க்கை மாறுகிறது.

சகுந்தலா தேவியை உலகமே வியக்கிறது. உலகமுழுவதும் சென்று தன்னுடைய கணிதத் திறமையைக் காட்டுகிறார். பணமும் சம்பாதிக்கிறார். ஆண்கள் மட்டுமே கல்வியறிவும், கணித அறிவும் பெறும் இடத்தில் ஒற்றை மனிதியாக நின்று சாதிக்கிறார். திருமணமும் செய்துகொள்கிறார். தன்னுடைய விருப்பப்படியே மகளையும் வளர்க்க விரும்புகிறார்.

கணித மேதையின் பெண்ணாக வளர்வதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார் மகள் அனுபமா. அம்மாவின் புகழிலும், நிழலிலும் வாழ விரும்பாதவர் தாயை வெறுக்க துவங்குகிறார்.

இப்படி, இரண்டு தலைமுறையைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தங்களின் இளமைப் பருவத்தை விரும்பியபடி வாழ முடியாமல் போனதால் அவரவரின் தாய் மீது கோவம் கொண்டவர்கள், ஒரு இடத்தில் மனம் மாறுகிறார்கள். இவற்றை சுவாரஸ்யமான கதையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

சகுந்தலா தேவியாக வித்யாபாலன் அப்படியே பொருந்துகிறார். எப்போதும் சிரித்துக்கொண்டே எந்த ஒரு விஷயத்தையும் அணுகுவதும், தைரியமாக எந்த ஒரு விஷயத்தை செய்வதும் என அப்ளாஸ் அள்ளுகிறார். அதுபோல, சகுந்தலா தேவியின் மகளாக சான்யா மல்ஹோத்ரா தேர்வும் நச்.

சகுந்தலா தேவியின் இளமைப் பருவம் முதல் முதுமைக் காலம் வரை அவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களைக் கோர்த்து படமாக்கியிருக்கிறார்கள். கேட்ட இடத்தில் எவ்வளவு பெரிய கணிதமென்றாலும், விநாடிகளில் பதிலளிக்கிறார். அதை திரையில் பார்க்கவே அட்டகாசமாக இருக்கிறது.

7,686,369,774,870 × 2,465,099,745,779 இதன் பதில் என்ன என்று கேட்ட 28 விநாடிகளிலேயே இதற்கான பதிலை (18,947,668,177,995,426,462,773,730) கூறி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த காட்சியாகட்டும், கணினி தவறாக விடை சொல்கிறது என சொல்லும் இடமாகட்டும் நேர்கொண்ட பார்வையுடன் மிரட்டுகிறார்.

வெறும் கணித மேதையாக மட்டும் காட்சிப்படுத்தாமல், பாலின பேதங்களை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களை, பெண் சுதந்திரம், தன்பால் ஈர்ப்பாளர் குறித்த கருத்தை தைரியமாக பேசியவற்றை என அவரின் ஒவ்வொரு தருணத்தையும் தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

உத்வேகமூட்டும் ஒரு பாசிட்டிவ் படமாக இருந்தாலும், சினிமாவாக முழுமைப் பெறவில்லை. சகுந்தலா தேவியை கொண்டாடும் படமாக மட்டுமே போய்விடுகிறது. அவரின் நிறை குறைகளை முடிந்தவரை பேசியிருந்தாலும், எப்படி கணித மேதையாக உயர்கிறார், அவரின் வளர்ச்சி, கணிதத்துக்கு எப்படி விடையளிக்கிறார் என்பது போன்ற விஷயங்கள் படத்தில் இல்லை. அதனால் படம் பெரிதாக முழுமையடையவில்லை.

இறுதியாக, சகுந்தா தேவி அவசியம் பார்க்க வேண்டிய சினிமா தான். இந்திய மக்களுக்கான ஒரு சினிமாவாக நிச்சயம் இருக்கும். வித்யாபாலனுக்கு பெஸ்ட் படங்களின் பட்டியலில் இந்தப் படத்துக்கும் ஒரு இடமுண்டு. இந்த ஊரடங்கு காலத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபட ஒரு எனர்ஜி தரும் பாசிட்டிவ் படமாக இருக்கும் சகுந்தலா தேவி..!

– நெல்லை முத்து

Related Posts