சினிமா செய்திகள் நடிகர்

விஜயகாந்த் விழாவில் கமல்,ரஜினியை வெளுத்த சரத்குமார்

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து நாற்பது ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.அவர்,1978 ஆம் ஆண்டிலிருந்து நடிக்கத் தொடங்கினார்.

இதை, அவருடைய தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கொண்டாடியது. நேற்று (15.4.2018) காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த விழா நடைபெற்றது.

விழாவில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விஜயகாந்தை வாழ்த்திப்பேசினர்.

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் பேசியது….

வெவ்வேறு திசையில் அரசியல் பயணங்கள் இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்காக இங்கே வந்திருக்கிறேன். எனக்கு வாழ்வு தந்தவர் கேப்டன். கேப்டனை பத்தி மீம்ஸ் போட்டால் அதைப் பாக்காத ஒரே ஆள் சரத்குமார்தான்.

ஒரு சூழலில் பெரிய கஷ்டம் எனக்கு வந்தது. அடுத்து என்ன பண்ணப்போறோம் என்று தெரியாத நிலை. கேப்டனோட மேக் அப் மேன் ராஜுதான் என்னை ராஜாபாதர் தெருவுக்கு கூட்டிட்டுப் போனார்.

அவர் படத்தில் நடித்தேன். படமெல்லாம் முடிஞ்ச பிறகு, என்னைக் கூப்பிட்டு இந்தப் படத்தில் உனக்குதான் பேர் வரும்னு சொன்னார். அதை எந்த ஹீரோவும் சொல்லமாட்டார்.

‘கேப்டன் பிரபாகரன்’ பண்ணும்போது எனக்குக் கழுத்தில் அடிபட்டிருந்தது. வேறு ஒருவராக இருந்தால், இன்னொரு ஆளைப் போட்டு படத்தை முடிச்சுட்டுப் போயிடலாம்.

ஆனால், அவர் எனக்காக வெயிட் பண்ணார். ஒரு டைரக்டர் கதை சொல்லும்போது, உடனே, எனக்கு போன் பண்ணி, ‘சரத் இந்த மாதிரி ஒரு கதை இருக்கு. உங்களுக்குச் சரியா இருக்கும்’னு சொல்லுவார். இதை யாரும் பண்ணமாட்டாங்க.

கூட இருக்கவனும் வளரணும்னு நினைக்கிறாரே, அதுக்காகவே அவரை எப்போதும் மறக்கமாட்டேன்.

பலர் நல்லவர்கள் மாதிரி இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவங்க நல்லவங்க கிடையாது. வீரர்கள் இருக்கும்போது களத்துக்கு வராமல் வீரர்கள் இல்லாதபோது களத்துக்கு வர்றாங்க. எதிரே பலமான படை இருக்கும்போது போருக்குப் போக வேண்டும். அந்தப் படை வலிமை இழந்தபிறகு, போருக்குப் போனால் அவன் சிறந்த வீரனாக இருக்க முடியாது.

நாம் ஒன்றுபடும்போது தமிழகம் சிறப்பாக இருக்கும். உடனே, சரத்குமார் விஜயகாந்துடன் கூட்டணினு எழுதிடாதீங்க. சொல்ல முடியாது காலத்தின் கட்டாயம் இருந்தாலும் இருக்கலாம். தமிழகத்துல வெற்றிடம் இருக்குன்னு சொல்றாங்க. வெற்றிடம் இல்லை. முதல்ல இருக்கவங்களை அடையாளம் காட்ட தெரிஞ்சுக்கோங்க. விஜயகாந்த்தைப் பத்தி மீம்ஸ் போட உங்களுக்குத் தகுதி இல்லை. வாழ்க கேப்டன்.

இவ்வாறு சரத்குமார் பேசினார்.

Related Posts