விமர்சனம்

சங்கத்தலைவன் – திரைப்பட விமர்சனம்

விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன்.

கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து ஒரு கையை இழக்கிறார். அதற்கு சரியான இழப்பீடு கேட்டுப் போராடுகிறது சங்கம்.

இழப்பீடு கிடைத்ததா? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுகிறது படம்.

விசைத்தறித் தொழிலாளி வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார் கருணாஸ். முதலாளியின் நம்பிக்கைக்குரியவராக இருக்கும் அதேநேரம் பாதிக்கப்பட்ட தொழிலாளியை அவர் ஏமாற்றுவதைக் கண்டு மனங்குமுறும் நேரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாதாரண தொழிலாளியாக இருந்து ஓர் அமைப்பை வழிநடத்தும் இடத்துக்கு உயரும் நேரத்தில் ஒருவருக்கு ஏற்படுகிற பலவித உணர்வுகளையும் நடிப்பில் காட்டியிருக்கிறார் கருணாஸ்.

சங்கத்தலைவராக வருகிற சமுத்திரக்கனி, பொதுவுடைமையாளர்களுக்கேயுரிய அறம் சார்ந்த மிடுக்கை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை தேடும் நேரத்திலும் பொதுவுடைமைக் கருத்துகளை எடுத்துச் சொல்லி தம் கொள்கைக்கு ஈர்க்கும் பாங்கு நன்று.

சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் ரம்யா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கை முழுதும் கஷ்டம் என்றாலும் ஒரு போராட்டக்காரரின் மனைவி என்பதால் பெருமையும் கொள்வதை முகத்திலும் உடல்மொழியிலும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

கருணாஸை காதலிக்கும் சுனுலட்சுமி, விசைத்தறி முதலாளியாக நடித்திருக்கும் மாரிமுத்து உள்ளிட்டோர் வேடங்களுக்கேற்ப நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சீனிவாசன் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் சற்குணத்தின் இசையும் கதைக்களத்துகேற்ற அளவில் இருக்கின்றன. 

ஜெயமூர்த்தியின் பாடல் உட்பட படத்தில் இடம்பெறும் பாடல்கள் சிந்திக்க வைக்கும் வரிகளோடு அமைந்திருக்கின்றன.

கதை எழுதியிருக்கும் பாரதிநாதன் இயக்குநர் மணிமாறனோடு இணைந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார். தற்போது நாட்டில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்துகின்றன வசனங்கள்.

இதுவரை திரையில் பதிவு செய்யப்படாத விசைத்தறித்தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதையைத் தேர்ந்தெடுத்து அதைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மணிமாறன். 

கருணாஸின் தந்தை ஈ.ராமதாஸ் மற்றும் அந்தக் குடும்பம் ஆகியன மூலம் பெரும்பாலான விசைத்தறியாளர்களைச் சரியாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடக்கத்தில் முதலாளியோடு பேச்சு, அதன்பின் காவல்துறை அதற்கடுத்து மாவட்ட ஆட்சியர் போன்ற நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறையை அணுகுவது அதனாலெல்லாம் பலன் கிடைக்காத போது போராட்டம் ஆகிய படிநிலைகள் திரைக்கதையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

எல்லா இடங்களிலும் நீதி மறுக்கப்படும்போது அழித்தொழிப்பு என்கிற பொதுவுடைமைக் கொள்கைகளில் ஒன்றே இப்படத்தின் இறுதிக்காட்சி ஆகியிருக்கிறது. 

இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து அதை எல்லோருக்கும் புரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

சங்கத்தலைவன் மக்கள் மனங்களை ஈர்க்கிறான்.

Related Posts