December 8, 2019
சினிமா செய்திகள்

தமிழக அரசுக்கு அந்த வாய்ப்பை தரமாட்டேன் – ரஜினி பரபரப்புப் பேச்சு

1980 – 90 களில் தமிழ்த் திரையுலகில் பல படங்களில் பணியாற்றியவர் கலைஞானம். கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு. இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் இருப்பவர்.

எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்தில் பாக்யராஜ், இவரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞானம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்காக பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா ஒன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பாரதிராஜா ஏற்பாடு செய்த அவ்விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.ஆர், பாக்யராஜ், அமீர், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார், நடிகை கே.ஆர்.விஜயா, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது…..

கலைஞானத்துக்கு பாரதிராஜா விழா எடுத்து உள்ளார். என்னை தலைவரே என்று தான் பாரதிராஜா எப்போதும் அழைப்பார். அவருக்கும், எனக்கும் ஆழமான நட்பு உண்டு. கருத்து வேறுபாடு இருந்தது. கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதைத் தாண்டி எங்களுக்குள் நட்பு உள்ளது. பணம், புகழ் சம்பாதிக்கலாம். பழைய நண்பர்களைச் சம்பாதிக்க முடியாது.

என்னைக் கதாநாயகனாக்கி கலைஞானம் படம் தயாரித்தார். எனக்குக் கதாநாயகனாகும் எண்ணம் இருந்தது இல்லை. வில்லனாகத் தான் நடித்துக்கொண்டு இருந்தேன். ஆனாலும் பைரவி என்ற படத்தலைப்புக்காகவே அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததுடன், படமும் வெற்றி பெற்றது.

சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் புராண சரித்திர கதைகளை படமாக்கியதால் திரைக்கதை ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. சமூகக் கதைகளைப் படமாக்கிய பிறகும் அந்த வழக்கமே தொடர்ந்து விட்டது. சினிமா படங்களில் இயக்குநர், தயாரிப்பாளருக்கு அடுத்தபடியாக கதாசிரியர் பெயரை இடம் பெற வைக்க வேண்டும்.

மலைக்கள்ளன், சந்திரலேகா, நான் நடித்த பாட்ஷா உள்ளிட்ட பெரிய படங்களின் கதாசிரியர்கள் யார் என்றே தெரியாது. அந்த நிலைமைகள் மாற வேண்டும். கலைஞானம் வாடகை வீட்டில் குடியிருப்பதாகச் சொன்னார்கள். அவருக்கு அரசு சார்பில் வீடு வழங்க ஆவண செய்வதாக அமைச்சர் இங்கே பேசினார். நான் அந்த வாய்ப்பை அரசுக்குக் கொடுக்க மாட்டேன். கடைசி மூச்சு வரை என் வீட்டில் தான் அவர் வாழ வேண்டும். கலைஞானம் வசிப்பதற்குரிய வீட்டை உடனடியாகப் பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts