சினிமா செய்திகள் நடிகர்

லதாரஜினியின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் – ரஜினிக்கு தொடரும் அவப்பெயர்

ரஜினிகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் தொடர்பான சிக்கல் இன்னும் தொடர்கிறது.

கோச்சடையான் படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ‘ஆட் பீரோ’ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குநராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.

இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையும், இலாபத்தில் 12 சதவீதமும் ஆட் பீரோ நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக உரிய தொகையை முழுமையாக வழங்காததால் லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ஆகியோருக்கு எதிராக பெங்களூரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை ஏற்று கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து ஆட் பீரோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

கடந்த 3–ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 10–ந் தேதி வழக்கின் மீதான விசாரணையை தொடருவது குறித்து நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், பண விவகாரத்துக்குள் தாங்கள் செல்ல விரும்பவில்லை என்றும், நேரடியாக வழக்கின் மூல பிரச்சினை குறித்து மட்டுமே தற்போது விசாரிக்கப்போவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் பெங்களூரு ஐகோர்ட்டு எந்த அடிப்படையில் கீழ்க்கோர்ட்டு வழங்கிய சம்மனுக்கு தடை விதித்தது? வழக்கை ரத்து செய்தது? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பெங்களூரு ஐகோர்ட்டின் உத்தரவை ஆட் பீரோ நிறுவனத்தின் வக்கீல் வாசித்துக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்த் தரப்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் தன்னுடைய வாதத்தில், பெங்களூரு ஐகோர்ட்டு சரியான முறையில் விசாரித்து தான் உத்தரவை பிறப்பித்ததாக தெரிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கீழ்க்கோர்ட்டில் லதா ரஜினிகாந்த் அவர் மீதான வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

அவருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு (எப்.ஐ.ஆர்.) மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்றும், அவருக்கு எதிரான சம்மனுக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் லதா ரஜினிகாந்துக்குச் சிக்கல் அதிகரித்திருக்கிறது.

உச்சநீதிமன்றமே அறிவுறுத்தியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காத மனைவியின் செயலால் ரஜினிக்கு மேலும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

Related Posts