February 17, 2020
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸின் குழப்பமும் ரசிகர்கள் கருத்தும்

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம், 2011-ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது ‘காஞ்சனா’.

‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில், அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ‘லட்சுமி பாம்’ படத்தின் முதல்பார்வை இணையத்தில் வெளியிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்தனர்.

முதல்பார்வை வெளியான அன்று இரவு ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், தான் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். லாரன்ஸின் இந்த அறிவிப்பால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று (மே 26) ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்: அதில் கூறியிருப்பதாவது:

“நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்,

சில தினங்களுக்கு முன்பாக ’லட்சுமி பாம்’ இந்திப் படத்திலிருந்து வெளியேறுவது பற்றி ட்வீட் செய்திருந்தேன். அப்போதிலிருந்து என்னுடைய ரசிகர்களும், அக்‌ஷய் குமார் ரசிகர்களும் இந்தப் படத்தை இயக்குமாறு என்னிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய உண்மையான அன்பில் நான் மூழ்கித் திளைத்தேன்.

ஆனால், உங்களைப் போலவே கடந்த ஒரு வாரமாக நானும் வருத்தத்தில் இருக்கிறேன். நீண்ட நாட்களாக இந்தப் படத்தை இயக்க மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தேன். இந்தப் படத்துக்காக என்னுடைய தேதிகளை ஒதுக்கி, முன் தயாரிப்புப் பணிகளுக்காக என்னுடைய நேரத்தைச் செலவழித்தேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் என்னைச் சந்திப்பதற்காக நாளை (இன்று) சென்னை வருகின்றனர். இது முழுக்க முழுக்க அவர்கள் கையில்தான் இருக்கிறது. என்னுடைய சுயமரியாதைக்குப் பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால், இதுகுறித்து யோசிப்பேன். சந்திப்புக்குப் பிறகு பார்க்கலாம். இந்த விஷயத்தில் அக்கறை கொண்டிருந்த அனைத்து ரசிகர்களிடமும் இந்தச் செய்தியைத் தெரிவிக்க நினைத்தேன்.”

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, நமக்கு தன்மானம்தான் முக்கியம் படத்தில் வேலை செய்யாதீர்கள் என்று சிலரும் நீங்கள் படத்தை இயக்குங்கள் என்று சிலரும் கருத்து சொல்கிறார்கள்.

அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்று தெரியவில்லை.

Related Posts