சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கருக்கு ஆர்.பி.செளத்ரி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் – உண்மை என்ன?

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல், படப்பிடிப்பில் விபத்து, உயிரிழப்பு, காவல்துறை வழக்கு எனப் பல தடைகளைச் சந்தித்து இப்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியான அறிவிப்பில், இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் புதிய படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது.

இதனால் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “படத்திற்கு 150 கோடி ரூபாய் வரை பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆனாலும், 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. ‘இந்தியன் 2’ படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்.

இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், இதுவரை 14 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறோம். மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தவும் தயாராக இருக்கிறோம். ஆகவே, எங்கள் படத்தை முடித்துக் கொடுக்க இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அவர் வேறு படங்களை இயக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஏப்ரல் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, பிற படங்களை இயக்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.

வழக்கு குறித்து இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க, ஷங்கர் அடுத்து இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கும் தெலுங்குப் படத்தின் கதை குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.

அப்படம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக்கதை என்னுடையது என்று சொல்லி சின்னசாமி என்பவர் வழக்குரைஞர் மூலம் அறிவிக்கை அனுப்பியிருக்கிறாராம்.

இந்த சின்னசாமி, ஆர்.பி.செளத்ரியிடம் பணியாற்றுபவர்.இதனால் ஷங்கருக்கு ஆர்.பி.செளத்ரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

பிரபலமாக இருப்பதால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

Related Posts