February 17, 2020
சினிமா செய்திகள்

தர்பார் பற்றிய கேள்வி பதுங்கிய டி.ராஜேந்தர்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் டிசம்பர் 22,2019 அன்று சென்னை கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

இந்தத்  தேர்தலில் தலைவர் பதவிக்கு, தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அருள்பதி தலைமையிலான அணிக்கும்,டி.ராஜேந்தர் தலைமையிலான அணிக்கும் போட்டி இருந்தது.மொத்தம் 534 வாக்குகளில் 458 வாக்குகள் பதிவானதாகச் சொல்லப்பட்டது.

இவற்றில், டி.ராஜேந்தர்  235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அருள்பதிக்கும் அவருக்குமான வித்தியாசம் 12 வாக்குகள்.

மேலும் இத்தேர்தலில், செயலாளர் பதவிக்கு டி.மன்னன் (239 வாக்குகள்),பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்),துணைத் தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணைச் செயலாளர்  பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்பு நேற்று (சனவரி 3) செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர்.

அப்போது, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் திரைத்துறைக்கு எட்டு விழுக்காடு கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதென்றும் அதை நீக்கக் கோரி அரசாங்கத்தை அணுகி முறையிடுவோம் என்றார்.

அதேபோல் திரையரங்குகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் திரையரங்குக்கு வருவதே குறைந்துவிட்டது என்ற டி.ராஜேந்தர், திரையரங்குக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்றார்.

அப்போது அவரிடம், தர்பார் படத்துக்கு 1200 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு, இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று விலகிக் கொண்டார்.

அதோடு, இதற்கு இன்னொரு பதில் சொல்கிறேன், பாகுபலி படம் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. அதன் டிக்கெட் விலை 100 ரூபாய், 50 ரூபாய்தான் என்றார்.

Related Posts