February 17, 2020
Uncategorized

சைக்கோ பட வெளியீட்டில் சிக்கல்?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. இப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சொன்னபடி படம் வெளியாகுமா? என்கிற பயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்களாம்.

என்ன காரணம்?

ஏவிஎம் நிறுவனத்தின் குடும்ப வாரிசான மைத்ரேயா என்பவரை கதாநாயகனாக்குகிறேன் என்று கூறி இயக்குநர் மிஷ்கின் ரூ.1 கோடி பணம் பெற்றிருக்கிறார்.

ஆனால், அவர் சொன்னது போல் மைத்ரேயாவை வைத்துப் படம் எடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குநர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில்,

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் என்னைக் கதாநாயகனாக வைத்துப் படமெடுப்பதாக ஒப்பந்தம் போட்டு என் தந்தையிடம் பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றார்.

சவரக்கத்தி படத்தை முடித்துவிட்டு என் படத்தைத் தொடங்குவதாகச் சொன்னார். அதன்பின், விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்தை எடுக்கிறேன் என்றார்.

ஆனால், இப்போது உங்கள் படத்தை எடுக்க முடியாது முன்பணத்தையும் இப்போதைக்குத் திருப்பித் தர இயலாது என்கிறார்.

சைக்கோ படத்தின் கதை எனக்குத் தெரியும். அந்த வேடத்துக்காக நான் இரண்டாண்டுகளாக நிறையப் பயிற்சிகள் எடுத்தேன். என்னை வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்த அவர், உங்கள் மகன் நடிப்பு நன்றாக இருக்கிறது. அவர் பெரிய நடிகராக வருவார் என்று என் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பினார்.

என்னை வைத்துப் படமெடுக்க வேறு சில இயக்குநர்கள் முன்வந்த போதும், சைக்கோதான் உன் முதல்படமாக இருக்கவேண்டும் என்றார் மிஷ்கின். அதனால் வந்த வாய்ப்புகளையும் விட்டுவிட்டேன்.இது நமக்கானது என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்துவிட்டு அது இல்லையெனும்போது ஏற்படுகிற வலி சொல்லி மாளாதது. அந்த வலியை நான் இப்போது அனுபவிக்கிறேன்

இவ்வாறு அவர் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார்.

இது நடந்தது 2018 அக்டோபர் மாதம். அந்தச் சிக்கல் இன்று வரை தீரவில்லையாம்.

வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பது தொடர்பாக, மைத்ரேயா தரப்பில் இருந்து மிஷ்கினை தொடர்பு கொண்டால் பதிலே இல்லையாம்.

இதனால், மைத்ரேயா தரப்பு, நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் ‘சைக்கோ’ படத்திற்கு தடை போட்டது. இதனால், ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட உதயநிதி கோபமடைந்துவிட்டாராம்.

உடனே,மைத்ரேயாவின் அப்பா ரகுநந்தனிடம் சமரசத்தில் ஈடுபட்ட மிஷ்கின், அக்டோபர் மாதம் ரூ.50 லட்சம், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தலா ரூ.25 லட்சம் தருவதாகக் கூறியிருக்கிறார். இதனையடுத்து சைக்கோ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது.

ஆனால், மிஷ்கின் சொன்னது போல் அக்டோபர் மாதம் 50 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லையாம். மீண்டும் பிரச்சினையில் தலையிட்ட நீதிமன்றம் மீண்டும் ‘சைக்கோ’ படப்பிடிப்புக்கு தடை போட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, ரகுநந்தனுக்கு இயக்குநர் மிஷ்கின் ரூ.50 லட்சம் செக் கொடுக்க, மீண்டும் ‘சைக்கோ’ படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

ஆனால், நவம்பர், டிசம்பர் மாதம் தருவதாகச் சொன்ன தொகையை மிஷ்கின் தரவில்லையாம். இதனால், ரகுநந்தன் மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல, அப்போது ‘சைக்கோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் இருந்து, இயக்குநர் மிஷ்கின் செய்த தவறுக்காக எங்களது படத்தின் படப்பிடிப்பை அடிக்கடி நிறுத்துவதால், எங்களுக்குத் தானே இழப்பு, என்று தங்களது வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால், மிஷ்கினுக்கு கொடுப்பட வேண்டிய சம்பள பாக்கி இருந்தால் அதை நீதிமன்றத்தில் கட்டுங்கள், என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.

இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் நடக்கும் மோதல் காரணமாகப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறதாம்.

இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாம்.

நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்திருக்கும் மிஷ்கின் இப்படிச் செய்யலாமா?

Related Posts