செய்திக் குறிப்புகள்

திரைக்குப் பின்னால் இருக்கும் ஹீரோ லைகா சுபாஸ்கரன் – ஜெயம்ரவி புகழாரம்

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ்த் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

தமிழ்த் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திரக் கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் குறுமுன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரகுமான் இசையில் “பொன்னி நதி” என்று தொடங்கும் இப்படத்தின் முதல் பாடல், ஜூலை 31 அன்று, எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில்,பொதுமக்கள் மற்றும் இரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது…..,

இங்கு இந்த இடத்தில் இரசிகர்களுடன் இந்தப் பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் தெரியும், ஆனாலும் படம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்கான ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. இந்தப் படம் எடுத்தது பெரிய சுவாரஸ்யம்.

நான், ஜெயராம் சார், ஜெயம் ரவி ஆகிய மூவரும் ஒன்றாக வரும் காட்சிகள் அதிகமாக இருந்தது. அதில் ஜெயராம் சார் உடன் பணிபுரிந்தது பெரும் பாக்கியம். அவர் மிகச்சிறந்த நடிகர். ஜெயராம் சார் நடிக்கும் நம்பி கதாபாத்திரத்தின் உயரத்திற்காக அவர் சில விசயங்களைச் செய்துள்ளார், அதை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக பிரமிப்பு உருவாகும்.

இந்தப் பாடல் பொன்னி நதி, இதைப் படமாக்கியது மிகப்பெரிய அனுபவம். அன்றைய பொன்னி நதி தான் இன்றைய காவிரி. இந்தப் படம் பல சிக்கல்களைக் கடந்து உருவானது, அதற்கு முழுக் காரணம் மணிரத்னம் சார் தான். அவர் 120 நாளில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துவிட்டார், இதை யாரும் நம்பமாட்டார்கள். இது போன்ற படத்தை மீண்டும் ஒருவர் எடுப்பதற்கு குறைந்தது 10 வருடங்கள் ஆகும்.

இந்தப் பாடலை ரகுமான் அவர் குரலில் பாடியுள்ளார், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்தப் பாடலை கேட்கும் போது, சோழ தேசத்துக்குப் போன மாதிரி இருந்தது. இந்தப் படம் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது, அதற்கு லைகா சுபாஸ்கரனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துப் போக முயற்சி செய்பவர் சுபாஸ்கரன். அவர் இந்தத் திரைப்படத்திற்காகப் பல கடுமையான முயற்சிகளைக் கொடுத்துள்ளார் என்றார்.

நடிகர் ஜெயராம் பேசியதாவது……,

இது போன்ற அற்புதமான படத்தில் சிறிய பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை மற்றும் சந்தோசம். அதற்கு தயாரிப்பாளர் சுபாஸ்கரன், மணிரத்னம், மற்றும் படக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாப் படமும், படம் பார்க்கும் போது தான் கதை தெரியும். ஆனால் பொன்னியின் செல்வன் கதையும், திரைக்கதையும், கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதிந்து இருக்கிறது. அருள்மொழி வர்மனுன், வந்தியத் தேவனும் உடல்வாகுவிற்காகக் கடுமையாக உழைத்தனர். உடற்பயிற்சி செய்தனர். மணிரத்னம் என்னை மட்டும் சாப்பிடச் சொல்வார். ஏனெனில் என் கதாப்பாத்திரம் குண்டாகத் தெரிய வேண்டும். மணிரத்னம் சாருடன் ரவிவர்மன், ரகுமான், தோட்டா தரணி எனப் பலர் உழைத்துள்ளனர். ஆழ்வார்க்கடியன் நம்பி உங்கள் மனதில் நிறைந்து இருப்பார் என்றார்.

நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது…..,

இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியை நடிக்கும் போது, மக்கள் எப்படி இதை இரசிப்பார்கள் என யோசிப்போம். இன்று அதில் சில காட்சிகளை உங்கள் மத்தியில் பார்த்து, அதற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பைக் கண்ட போது, இந்தத் திரைப்படத்தில் நாங்கள் நடித்ததற்கான முழு சந்தோசம் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் மட்டும் தான் ஒரு நல்ல ஷாட்டிற்கு கூட வரவேற்பைக் கொடுப்பார்கள், அவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் இரசிகர்கள். நமக்குப் பிடித்த கார்த்தி, ரகுமான், ரவிவர்மன், பிருந்தா மாஸ்டர் என அனைவரும் ஒன்றாகி வந்துள்ள இந்தப் பாடல் சிறப்பாக உருவாகியுள்ளது.

கார்த்தி எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இந்தப் படத்தில் இருந்தார். இந்தப் படத்தில் பல ஹீரோக்கள் இருக்கின்றனர். திரையில் தெரியாத பல ஹீரோக்களும் இருக்கிறார்கள். முதலில் மணிரத்னம் சார், அவருக்கு இந்தப் படம் பலவருட கனவு, பலரால் முடியாததைச் சாதித்துள்ளார். அடுத்ததாக லைகா சுபாஸ்கரன் தான் இந்த படத்தின் திரைக்குப் பின்னால் இருக்கும் ஹீரோ, அவர் இந்தப் படத்திற்குப் பெரிய பங்களிப்பைக் கொடுத்துள்ளார்.

அடுத்ததாக ரவிவர்மன், தோட்டா தரணி சார் ஆகியோர் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். என்றைக்கும் ஹீரோவான ரகுமான் சார் உடன் எனக்கு முதல் படம், அது பெருமையாக இருக்கிறது. நடிகர் ஜெயராம் சார் உடன் நடித்தது எனக்குப் பெருமையான, மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படம் பெரிய பாடத்தை எங்களுக்குக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் பல ஆயிரம் பேர் உழைத்துள்ளனர். பொன்னியின் செல்வன் மக்களுக்காகவே எடுத்த படம், கூடிய விரைவில் படம் வெளியாகும், அது கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts