September 23, 2020
கட்டுரைகள்

நல்ல சினிமாவின் காதலர் – தயாரிப்பாளர் பி.மதன் பிறந்தநாள் சிறப்பு

இயக்குநர்களின் ஊடகமான திரைத்துறையில் இயக்குநர் நடிகர் ஆகியோரைத் தாண்டி படத்துக்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர் சிறப்புப் பெறுகிறாரென்றால் அவர் செய்யும் செலவுக்காக அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்காகவே சிறப்புப்பெறுவார்.

அப்படி நல்ல கதைகளைத் தேடிப் படமாக்கும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர்தான் பி.மதன்.

பொறியியல் பட்டதாரி, கலை மீது காதல் கொண்ட அவர், கல்லூரித் தோழரான இயக்குநர் கெளதம்மேனனுடன் இணைந்து திரைத்துறையில் பயணத்தைத் தொடங்கினார்.

இவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த முதல்படம், விண்ணைத்தாண்டி வருவாயா. முதல் படம் கொடுத்த வெற்றியும் மதிப்பும் அடுத்தடுத்த படங்களை ஆர்வமாகத் தயாரிக்க உந்துசக்தியாக அமைந்தது.

சுசீந்திரன் இயக்கத்தில் அப்புகுட்டியை நாயகனாக்கி அவர் தயாரித்த அழகர்சாமியின் குதிரை, தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்த படம்.

ஆனாலும் பொருளாதார ரீதியாக அவருக்கு இழப்பை அந்தப்படம் ஏற்படுத்தியது.

அந்த இழப்பிலிருந்து மீண்டெழுந்து அவர் தயாரித்த கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய படங்கள் விமல் எனும் நாயகன் உருவாகக் காரணமாக அமைந்தவை.

அதன்பின் அவர் தயாரித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனை முன்னணி நாயகனாக உருவாக்கின.

அடுத்தடுத்து கயல், மாப்பிள்ளை சிங்கம், கொடி ஆகிய படங்களைத் தயாரித்தார்.

இப்போது தனுஷ் நடிக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்று கணக்குப் போட்டுப் படமெடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தாலும், அவருக்குள் இருக்கும் நல்ல சினிமா ரசிகன் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அண்மையில் நடந்த நிகழ்வு மெய்ப்பித்திருக்கிறது.

மார்ச் 15 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வரும் படம் நெடுநல்வாடை.

இப்படத்தின் இயக்குநர் செல்வகண்ணனை நம்பி திரையுலகம் பற்றித் தெரியாத 50 நண்பர்கள் படத் தயாரிப்பில் இறங்கினார்கள். ஐந்தாயிரம் பத்தாயிரம் முதல் ஐந்து இலட்சம் பத்து இலட்சம் மற்றும் இருபது முப்பது இலட்சங்கள் என பல்வேறு விதமான பங்களிப்பில் உருவானது அந்தப்படம்.

பணம் புரட்டவே சிக்கல் எனும்போது நாயகனாக நடித்தவர் விட்டுவிட்டுப் போனார். நாயகியாக நடித்தவர் பாலியல் புகார் சொல்லிவிட்டுப் போனார் என்கிற தாங்கொணாத் துயரங்களையும் தாண்டி அந்தப்படம் தயாரானது.

இப்போது படம் எடுப்பதை விட அதை வெளியிடுவதுதான் பெரிய வேலை எனும் நிலை.

இந்நிலையில் தன் நண்பர் ஜேம்ஸ் மூலம் இப்படம் பற்றி அறிந்த மதன், இப்படத்தை வெளியிட உதவினார். அவரால்தான் இந்தப்படம் வெளியாகிறது, இப்படத்தைத் தயாரித்த அனைவரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் என்று பொதுமேடையில் சொன்னார் நெடுநல்வாடை இயக்குநர் செல்வகண்ணன்.

தான் தயாரித்த படத்தை வெளியிடப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் வேளையிலும் ஒரு நல்ல படத்துக்கு நம்மால் ஆன உதவி செய்வோம் என முன்வந்து பலரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் மதன்.

அவர் இன்று (மார்ச் 19) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

– அ.தமிழன்பன்

Related Posts