சினிமா செய்திகள்

நயன்தாரா வழியில் தமன்னா – தொடங்கி வைக்கும் பெட்ரோமாக்ஸ்

அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருக்கும் திகிலான நகைச்சுவைத் திரைப்படம் இது.

பல வெள்ளி விழாத் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம், முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது.

நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவைக் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்தியன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவைக் கூட்டணியுடன், ஒரு சவாலான கதாபாத்திரத்தில், திகிலாக வலம் வருகிறார் தமன்னா.

இவர்களுடன் பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஒரு பேய் வீடு இருக்கிறது. அதில் தமன்னா குடும்பத்துடன் குடியேறுகிறார். அதன்பின் அங்கு நடக்கும் நிகழ்வுகள் வயிற்றைப் புண்ணாக்கும் வகையில் நகைச்சுவையுடன் படமாக்கப் பட்டிருக்கிறதாம்.

டேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த திகிலான நகைச்சுவைக்கு ஜி ஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுதியிருக்கிறார்.

இப்படம் அக்டோபர் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Related Posts