September 18, 2020
விமர்சனம்

பட்டாஸ் – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்துகொண்டு நண்பனோடு சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் சினேகாவை சந்திக்கிறார்.

அப்போதுதான் தான் யார்? என்பது தெரியவருகிறது.

அதன்பின் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்? அப்படி என்னவெல்லாம் என்பதுதான் படம்.

பட்டாஸ் என்கிற பெயரில் நண்பன் சதீஷ் அப்பா முனீஸ்காந்த் ஆகியோரோடு துறுதுறுவெனச் சுற்றிக்கொண்டிருக்கும் தனுஷ், அந்த வேடத்துக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷை இப்படி ஒரு வேடத்தில் பார்க்க முடிகிறது. இதை தொடருங்கள் தனுஷ்.

தனுஷுடனே வருகிற சதீஷ் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.

சினேகாவின் பாத்திரப்படைப்பு சிறப்பு. அவர் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய கதாபாத்திரம். அந்தப் பாத்திரமாகவே மாறி வரவேற்புப் பெறுகிறார்.

இளமை மற்றும் நடுத்தர வயதுக்கேற்ற மாற்றங்களை தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் காட்டியிருக்கிறார் சினேகா.

திரவியபெருமாளாக வருகிற தனுஷ், பாரம்பரியக் கலையான அடிமுறையை முறையாகக் கற்றவர் போல் மிக இயல்பாகச் சண்டை செய்கிறார்.

பட்டாஸ் ஜோடியாக வரும் மெகரீன் பார்க்க நன்றாக இருக்கிறார். தனுஷுக்காக அடிபட்டு பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திராவுக்கு கனமான வேடம். அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார். கடைசி சண்டைக்காட்சி அவருக்கு பலம்.

நாசருக்கு நல்லவேடம். அவர் சரியாக நடித்திருக்கிறார் என்று புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கதை நடக்கும் காலங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

விவேக் மெர்வின் இசையில் இரண்டு துள்ளலிசைப் பாடல்கள் தாளம்போட்டு ரசிக்கவைக்கின்றன. மற்றவையும் தாழ்வில்லை.

பழந்தமிழர் பெருமை பேசும் அடிமுறை சண்டைகளை அழகுற வடிவமைத்திருக்கிறார் திலீப் சுப்பராயன்.

படத்தொகுப்பாளர் பிரகாஷ் முன்பாதியில் கொஞ்சம் குறைத்திருந்திருக்கலாம்.

கதையாக பழைய கதை என்றாலும், அடிமுறை என்கிற பழந்தமிழர் கலையை மையமாக வைத்து திரைக்கதை எழுதி படத்தை புதிதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

மண், மக்கள், தமிழ் பற்றிய பெருமைகள் கொண்ட வசனங்கள் இயக்குநருக்கும் தனுஷுக்கும் மரியாதை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

பட்டாஸ் பாஸ்.

Related Posts