December 8, 2019
கட்டுரைகள்

வடசென்னை மேல் ஏன் இவ்வளவு வன்மம் வெற்றிமாறன் ?

வடசென்னை படம் தொடர்பாக வடசென்னையைச் சேர்ந்த லட்சுமிபதி முத்துநாயகம் எழுதியுள்ள வேதனைப்பதிவு…..

வடசென்னை திரைப்படத்திற்கு தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகள் கெட்ட வார்த்தைகளுக்காக மட்டுமே அல்ல.

வடசென்னை பலதரப்பட்ட உழைக்கும் மக்களை கொண்டது.. இத்திரைப்படத்தில் அப்படி பலதரப்பட்ட மக்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?.. மாறாக மீனவ சமூக மக்களை மட்டும் பதிவு செய்து அதிலும் அவர்களை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள்.. ஆங்காங்கே சில காரணங்களை வைத்து நியாயப்படுத்துகிறார் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்..

பின் எந்த காரணத்திற்காக இத்திரைப்படத்திற்கு “வடசென்னை” என்று பெயர் வைத்தார் என்று தெரியவில்லை.. ஒரு நிலப்பரப்பின் பெயரை வைத்துவிட்டு அதிலுள்ள பெரும்பாலானவர்களை தவறானவர்களாக சித்தரிப்பதால், அந்த பகுதியில் வாழும் மக்கள் அனைவரையும் பொது சமூகத்தில் இருப்பவர்கள் தவறாகவே எண்ணுவார்கள் என்ற நடைமுறை சிக்கலை வெற்றிமாறன் அவர்கள் அறியாதவர் அல்ல என்றே நான் நம்புகிறேன்.

ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கிடையே நடக்கும் அதிகார, துரோக, பழிவாங்கல் சண்டைகளுக்கு ஒரு நிலப்பரப்பின் பெயரை வைப்பது எவ்வளவு பெரிய வன்மம் தெரியுமா?

குறைந்த பட்சம் “வடசென்னை” என்ற பெயரையாவது வைக்காமல் இருந்திருக்கலாம்.. காரணம் பொதுப்புத்தியில் “வடசென்னை” என்றாலே அங்கு வசிக்கும் மக்கள் ரவுடிகள், எப்போது வேண்டுமானாலும் சண்டைப்போடுவார்கள், அசிங்கமாக பேசுவார்கள், நாகரீகமற்றவர்கள் என்றுதான் கருதுகிறார்கள்..

Youtube-ல் வடசென்னை தொடர்பான வீடியோவில் யாரோ ஒரு நண்பர் பதிவிட்ட கருத்து இது ..
“எனக்கு வடசென்னை பத்தி சினிமாவில் பார்த்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது.. ஆனால் வடசென்னையை கதைக்களமாய் கொண்ட படங்களைப் பார்க்கும் போதெல்லாம் சராசரி மனிதர்களே அங்கில்லையா என தோன்றும்..”

வெற்றிமாறன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் கூட “நாங்கள்(சினிமாக்காரர்கள்) வடசென்னையை தவறாக காட்டி தவறு செய்திருக்கிறோம். அதை தற்போது உணர்ந்திருக்கிறோம்” என்று கூறினார். பின்னர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் போது “வடசென்னை” Gangster படமல்ல என்றும் தெரிவித்தார்.. நானும் அவரை நம்பினேன். தற்போது படத்தை நாம் அனைவரும் பார்த்துவிட்டோம்.. படம் எப்படி இருக்கிறது?

இச்சமூகமும், சினிமாவும் வடசென்னையை தவறாக அடையாளப்படுத்துவதால் நான் சந்தித்த சில கசப்பான அனுபவங்களை இங்கு பகிர்கிறேன்.. அதற்குமுன் என்னை பற்றிய சில தகவல்கள்.. இதற்கு காரணம் இருக்கிறது..

நான் லட்சுமிபதி. வடசென்னையின் ஒரு பகுதியான வியாசர்பாடியில் பிறந்து, வாழ்ந்து வருகிறேன். வயது 28.
2005 – பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் – 429/500 – 85.8%
2005 to 2008 – DME – டிப்ளமா இன் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் – 82.07%
2010 to 2013 – B.E மெக்கானிக்கல் இன்ஜினீரிங் – 71.5%

இனி..
சம்பவம் – 1.
2007-ஆம் ஆண்டு ஒருநாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருக்கையில் என்னை கேள்வி கேட்டார்.. உடனே பதில் தெரியவில்லை என்பதால் அமைதியாக ஆசிரியரை பார்த்துக்கொண்டிருந்தேன். உடனே அவர் கோபமடைந்து, “ஏன்யா வியாசர்பாடினா வாத்தியாரையே முறைப்பியா? என்று கேட்டார். நான் எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். அவர் எதற்காக அப்படி கேட்டார் என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை.. ஏனென்றால் நான் முடிந்த அளவுக்கு மற்றவர்களிடம் தன்மையாகவே பேசுவேன்.. வீணாய் யாரையும் சீண்டியதில்லை..

சம்பவம்-2.
2015-ஆம் ஆண்டு இறுதியில், ஒரு தனியார் மென்பொருள் கம்பனியில் வேலை செய்து வந்தேன். ஒருநாள் சகநண்பர் ஒருவர் அருகில் வந்து “பாஸ் உங்க ஏரியாவுல நிறைய ரவுடிங்க இருப்பாங்கல்ல?” என்று சிரித்துக்கொண்டே ஜோக் சொல்வதுபோல் கேட்டார்.. இன்னொருவர் ” உங்ககிட்டலாம் வச்சுக்கவே கூடாதுபா.. எதுனான்னா உடனே வெட்டிடுவீங்க இல்ல?” என்று சகஜமாக கேட்டார்..

சம்பவம்-3.
2017,அக்டோபர் – ஒருநாள் வேறொரு வேலை சம்மந்தமாக வடபழனி அருகே செல்லும்போது one way என்று தெரியாமல் ஒரு தெருவிற்குள் பைக்கை ஓட்டிச் செல்ல பார்த்தேன்.. அப்போது போக்குவரத்து காவல் அதிகாரி என்னை மடக்கினார். “one way-ன்னு தெரியாதா” எனக்கேட்டார். “பர்ஸ்ட் டைம் இங்க வரேன் சார்.. தெரியாது” என்றேன்.. எந்த ஊர் என்று கேட்டதற்கு சென்னை என்று சொன்னேன்.. அதை நம்பாமல் என் லைசன்ஸை கேட்டார். நான் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருந்தேன்.. அதைக் காட்டி “சார் பாருங்க.. நான் சென்னை வியாசர்பாடில தான் இருக்கேன்” என்றேன்.. அவர் உடனே “வியாசர்பாடியா!!! அதான்… நீங்க போலீசையே ஓடவிடுவீங்களே “.. என்று சொல்ல, நான் “சார் நான் படிச்சிருக்கேன்.. ரூல்ஸ்லாம் பாலோ பண்ணுவேன்” என்று கூற, அவர் அதை காதில் வாங்காமல் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப என்னை “வியாசர்பாடி… நீ அப்டி தான் பண்ணுவே” என்றார்.. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த நான் “சார் தப்பு என் மேல தான். இது one way-ன்னு தெரியாது.. ஆனா ஏரியாவ வச்சு அடையாளப்படுத்தாதீங்க..” என்று இரண்டுமுறை கூறினேன்.. சில வினாடிகள் என்னையே பார்த்தார். பின் லைசன்ஸை தந்து என்னை அனுப்பிவிட்டார்..

மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் பத்து ஆண்டுகள் காலத்திற்குள் நடந்தது. ஆனால் ஏரியாவை வைத்து தவறாக அடையாளப்படுத்துவது சிறிதளவும் மாறவில்லை..

இதிலிருந்து ஒன்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.. நீங்கள் என்னதான் படித்தாலும், நல்ல வேலைக்கே சென்றாலும் இந்த சமூகம் உங்கள் வாழ்விடத்தை வைத்து உங்களை தவறாக அடையாளப்படுத்துவதை வேண்டுமென்றே செய்கிறது..

இது 2018. “வடசென்னை” திரைப்படம் வெளிவந்து வடசென்னை மக்களைப் பற்றிய சில தவறான பார்வையை பொது சமூகத்தில் வைத்திருக்கிறது.. நிச்சயம் இதன் தாக்கம் சில ஆண்டுகள் எம்மக்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் கஷ்டப்படுத்தும், பின்னால் தள்ளும்.. இருப்பது போதாதென்று இதையும் தாங்கித்தான் நாங்கள் வெளிவர வேண்டும்..

என் நண்பனுக்கு நடந்த ஒரு அனுபவத்தை இங்கு கூறுகிறேன்..

என் நெருங்கிய நண்பன் ஒருவன் சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு பெரிய வைர நகைக்கடைக்கு சேல்ஸ் பாய் வேலைக்கு இன்டெர்வியூ சென்று செலக்ட் ஆனான். கடைசி கட்ட Process ஆக வியாசர்பாடியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் No Objection Certification(NOC ) வாங்கித்தரச் சொல்லி நண்பனை அழைத்துச் சென்றவர் கேட்டார். அவனும் அதற்கான வேலைகளில் இறங்கினான். அடுத்த நாள் அந்த நபர் நண்பனுக்கு கால் செய்து “உன்ன வேலைக்கு வேணாம்னு சொல்றாங்கப்பா” என்றார் .. அவன் ஏன் எனக் கேட்டதற்கு, “நீ வியாசார்பாடின்றதால யோசிக்கிறாங்கப்பா” என்றார்.. என் நண்பன் நல்லவன். எங்கும் வீண் சண்டைக்கு போனதில்லை. தவறான காரியத்தை செய்ததில்லை.. ஆனால் அவனுக்கு வியாசர்பாடி என்பதால் வேலை தர மறுத்துவிட்டார்கள்.

இதுதான் நிலப்பரப்பின் பெயரை வைத்து தவறாக சித்தரிப்பதற்கான பின்விளைவு.. அதை அனுபவிப்பது எப்போதும் நாங்கள்தான்.. இதை செய்பவர்கள் அல்ல..

நான் இங்கே பகிர்ந்தது சிலதான்.. பலருக்கு இதைவிட மோசமாகவும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் மன்னிப்பு கேட்டு அளித்த பேட்டியை பார்த்தேன்.. வடசென்னை-2,3-ல் தவறை திருத்துவார் என்று எண்ணுகிறேன்.. இதை படிக்கும் நண்பர்கள், வெற்றிமாறன் அவர்களுக்கோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் மூலமாக அவருக்கு தெரியப்படுத்தினாலோ நன்றாக இருக்கும்…

கலைஞர்கள் கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் செய்யும் செயல்களால் எளிய மக்கள் எவ்வாறு நேரடியாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இது வெறும் சினிமா, சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றெல்லாம் அபத்தமாக பேசாதீர்கள்.. நம் மக்கள் தங்கள் தலைவர்களை அவர்களின் கொள்கைகள் மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ தேர்ந்தெடுப்பதில்லை.. மாறாக சினிமாவிலிருந்தே தேர்ந்தெடுக்கிறார்கள்.. சினிமா அந்தளவுக்கு அவர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

வடசென்னையில் வாழும் இளைஞர்கள் பலர் படித்து, நல்ல வேலைக்கு போய் மகிழ்ச்சியான வாழ்வையே வாழ்கிறோம், வாழ ஆசைப்படுகிறோம்.. ஆனால் சிலர் செய்யும் தவறான செயல்களை ஒட்டுமொத்த மக்களின் செயலாய் சித்தரிப்பது மிகவும் தவறு..

“வடசென்னை” திரைப்படம் ஒரு “உலக சினிமா, Uncut Raw, Cult சினிமா, தமிழ் சினிமாவின் உச்சம்” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி புகழ்ந்துவிட்டு, பிறகு தத்தமது வேலைகளைப் பார்க்கச் சிலர் சென்றுவிடுவார்கள்..

ஆனால் வடசென்னை இளைஞர்கள் படித்துவிட்டு எண்ணற்ற கனவுகளுடன் வேலைக்கான Interview-க்கு செல்லும்போது HR-ம், வேலைக் கிடைத்தபின்(?) உடன் பணிபுரிபவர்களும், மனதில் பயம், அவநம்பிக்கை, காழ்ப்புணர்ச்சி, அருவருப்பு, தவறான புரிதல்களோடு அவனைப் பார்த்து கேட்பார்கள்,,
“நீங்க வடசென்னையா?”

லட்சுமிபதி முத்துநாயகம்
வியாசர்பாடி ,
வடசென்னை..

Related Posts