ஓ2 – திரைப்பட விமர்சனம்

இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின் கஷ்டத்தைப் போக்க மருத்துவசிகிச்சைக்காகக் கேரளா செல்கிறார் நயன்தாரா. ஒரு கடுமையான மழை நாளில் நடக்கும் பேருந்துப் பயணம்.
அப்பேருந்துக்குல், பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்து தன் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையுடன் பயணிக்கும் நடுத்தரவயதுக்காரர். ஒரு காதல் இணையர், இணையர் என்றால் அவர்கள் இணைந்து வருவதில்லை. காதலைப் பிரிக்க அப்பா, தன் மகளைக் கேரளாவுக்குக் கூட்டிச்செல்ல தகவலறிந்த காதலனும் அந்தப் பேருந்தில் பயணிக்கிறார்.
ஒரு தவறான காவல்துறை அதிகாரி, ஓர் அரசியல்வாதி எனப் பல்வேறுவிதமான பயணிகளைக் கொண்ட அப்பேருந்து மலைப்பாதையில் போகும்போது நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துவிடுகிறது.
அதன்பின் என்னவாகிறது? என்பதைப் பதைக்கப் பதைக்கச் சொல்லியிருக்கிறது ஓ2.
நயன்தாரா நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டிய்தில்லை. அவருடைய மகனாக நடித்திருக்கும் சிறுவன் ரித்விக் அவருக்கு இணையாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
மறைந்த ஆர்.என்.ஆர். மனோகர், பரத் நீலகண்டன், பேருந்து ஓட்டுநராக வரும் ஆடுகளம் முருகதாஸ், ஷாரா, ஜாஃபர் இடுக்கி என குறைவான கதாபாத்திரங்கள்தாம் படத்தில் இருக்கின்றன. எல்லொரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆடுகளம் முருகதாஸ் கூடுதல் வரவேற்புப் பெறுகிறார்.
குறைவான நெருக்கடியான இடத்திலும் நிறைவான ஒளிப்பதிவைக் கொடுத்துப் படத்தின் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ்.ஏ.அழகன்.
விஷால் சந்திரசேகர் இசையில் சுவாசமே சுவாசமே பாடல் நன்று பின்னணி இசை பொருத்தம்.
இந்த பூமிக்கு நாம் செய்யும் தீங்குகள் சற்றும் குறைவில்லாமல் நமக்கு வந்து சேர்ந்தே தீரும் என்கிற அபாய எச்சரிக்கைச் சங்கை இந்தப்படத்தின் மூலம் ஊதியிருக்கிறார் புது இயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ்.
படத்தின் முக்கியமான கட்டத்தில் ஓர் இலை கைபேசியை இணைக்கும் காட்சி மிகையாக இருந்தாலும் சுவை.