விமர்சனம்

என்.ஜி.கே – திரைப்பட விமர்சனம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே.

சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை.

தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில் எரிச்சல் மூட்டுகிறார் செல்வராகவன்.

சாய்பல்லவி அழகான மனைவி அறிவாளியாகவும் தெரிகிறார். போகப்போக அறிவும் இல்லாமல் கதைக்குத் தேவையும் இல்லாமல் சோதிக்கிறார்.

கட்சிக்கு பரப்புரை உத்தியை வகுக்கும் பெரிய நிறுவனத்தை நடத்தும் ரகுல்பிரீத்சிங், அளவாக நடித்திருக்கிறார். அவர் சூர்யாவைச் சந்தித்தபின் என்னவெல்லாம் நடக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்களோ அத்தனையும் அட்சரம் பிசகாமல் நடக்கிறது.

உமாபத்மநாபன் நிழல்கள் ரவி ஆகியோரில் ஒருவர் பேசியே கொல்கிறார். இன்னொருவர் பேசாமல் வதைக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினராக இளவரசு, முதலமைச்சராக தேவராஜ், எதிர்க்கட்சித் தலைவராக பொன்வண்ணன் உட்பட நிறைய அரசியல்வாதிகள் படத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.பொன்வண்ணன் பேசும் வசனங்கள் அபத்தம். யாரையோ கிண்டல் செய்வதாக நினைத்து அவற்றை எழுதியிருக்கலாம். ஆனால் இவர்கள்தாம் கிண்டலுக்கு ஆளாகிறார்கள்.

யுவனின் இசையில் கபிலன் எழுதியுள்ள தண்டல்காரன் பாடல் கவனிக்க வைக்கிறது.பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கிறது.

சிவகுமார்விஜயன் ஒளிப்பதிவு கதைக்குப் பொருத்தமாக இல்லை.சூர்யா இயற்கைவிவசாயம் செய்கிறார் என்று பெயர் ஒரு காட்சி கூட பசுமையாக இல்லை.

பாலாசிங்கை அடித்துப் போட்டிருக்கும் காட்சியில் பின்னணி விளக்குகளும் வெல்டிங் ஒளியும் எதற்கு?

சமகால அமைச்சரின் பாலியல் அத்துமீறல் காட்சி மட்டுமே மக்களுக்குப் புரிகிறது. அங்கு மட்டும் எல்லோரும் சிரிக்கிறார்கள். ரசிக்கிறார்கள்.

உன்னை மாதிரி படித்தவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரணும் என்று சூர்யாவை அழைக்கும் காட்சியில் பின்னணியில் எம்.ஜி.ஆர் படத்தைக் காட்டுகிறார்கள். அது எதற்கு? படிக்காத எம்.ஜி.ஆர் வந்து அரசியலைச் சீரழித்துவிட்டார் என்கிறார்களா?

அரசியல், சமகால அரசியல் ஆகிய எதிலுமே எந்தத் தெளிவுமே இயக்குநர் செல்வராகவனுக்கு இல்லை என்பது புரிகிறது.

இன்னொருவன் காதலியை இழுத்துக் கொண்டு ஓடுவது போன்று தமக்குத் தெரிந்த விசயங்களை மட்டுமே செல்வராகவன் படமாக்குவது அவருக்கும் நல்லது ரசிகர்களுக்கும் நல்லது.

Related Posts