October 23, 2019
சினிமா செய்திகள்

உடனே பதில் சொன்ன கமல் கண்டுகொள்ளாத சிம்பு

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்து எடுக்கப்படுகிறது.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வருகிறார்.

இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 இல் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில், பலத்த காற்று, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் கனமழை எல்லாவற்றையும் நாங்கள் இன்று சந்தித்தாலும் நாங்கள் பின்வாங்கவில்லை, முன்னோக்கி சென்றுள்ளோம் என்று கவுதம்கார்த்திக் சொல்லியிருந்தார்.

சிம்புவும் அவரும் படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டார்.இதனால் எல்லாம் நன்றாகப் போகிறதென மகிழ்ச்சியாக இருந்தாராம் தயாரிப்பாளர்.

அந்த மகிழ்ச்சி சிலநாட்கள் கூட நீடிக்கவில்லையாம். ஒரு வாரம் வரை நடித்த சிம்பு, அதன்பின் ஏதேதோ காரணம் சொல்லி நான் சென்னை போய்விட்டு வருகிறேன் என்று புறப்பட்டுவிட்டாராம்.

சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எல்லாவற்றையும் ஒரேமூச்சில் எடுத்துவிடத் திட்டமிட்டிருந்த படக்குழு சிம்பு இப்படிச் சொன்னதால் அதிர்ச்சியானதாம்.

ஆனாலும் அவரை வற்புறுத்த முடியாதே, அதனால் படக்குழு அமைதியாக இருந்ததாம்.

அப்போது புறப்பட்டு வந்த சிம்பு அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது வைக்கலாம் என்று சொல்லாமல் இருக்கிறாராம்.

இதனால் வெறுத்துப் போன தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம்.

கமல் குறித்து புகார் சொன்ன அதேநேரம் சிம்பு மீதும் புகார் கொடுத்திருக்கிறார்.

கமலிடமிருந்து உடனே பதில் வந்துவிட்டது. ஆனால் இன்று வரை சிம்பு தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையாம்.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் நொந்து போயிருக்கிறார்களாம்.

Related Posts