சினிமா செய்திகள்

அஜீத்துக்காக செய்த மாற்றங்கள் – இயக்குநர் வினோத் வெளிப்படை

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து, போனிகபூர் தயாரித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
குரல் பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசைச் சேர்ப்பு ஆகிய பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

படம், ஆகஸ்டு மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் எச்.வினோத் படம் பற்றிக் கூறியிருப்பதாவது….

இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.அஜித் நடிப்பு, இதுவரை பார்த்திராத அளவுக்கு இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை, இந்தப் படத்தில் பார்க்கலாம். அவருடைய நடிப்புத் திறமையும், அழகும் மிகுந்த வித்யாபாலன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

பொதுவாக பெண்களை ஆண்கள் எப்படிப் பார்க்க வேண்டும்? எப்படி அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதே கதையின் கரு.

கணவராகவே இருந்தாலும் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட படம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படம் இது.

அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தைத் தழுவிய கதை இது. அமிதாப்பச்சனை 75 வயது பெரியவராக அந்தப் படத்தில் காட்டியிருந்தார்கள். தமிழில், அஜித் கதாபாத்திரத்தை 47 வயதுள்ளவராகக் காட்டியிருக்கிறோம்.

இதுபோல் கதையில் இருந்து விலகாமல், தமிழ்ப் படத்துக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘பிங்க்’ படத்தில் சண்டைக் காட்சிகள் கிடையாது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் 2 சண்டைக் காட்சிகள் உள்ளன.

படத்தில் நிறையப் புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். எல்லோரும் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள்.

பொதுவாக ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு அஜித் படத்தை பார்ப்பதில்லை. ‘நேர்கொண்ட பார்வை’யை ‘டப்பிங்’குக்கு முன்பே பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டினார்.”

இவ்வாறு இயக்குநர் வினோத் கூறியுள்ளார்.

இக்கூற்றின் உண்மைத்தன்மை ஆகஸ்ட் பத்தாம்தேதி தெரியவரும்.

Related Posts