February 17, 2020
விமர்சனம்

நேர் கொண்ட பார்வை – திரைப்பட விமர்சனம்

ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது.

அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார். அவர்களுக்கும் அஜீத்துக்கும் என்ன தொடர்பு? ஆகியனவற்றைச் சொல்வதுதான் படம்.

அஜீத்தின் அறிமுகக் காட்சி ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்கிறது. ஆனால் மிக அழுத்தமானதாக இருக்கிறது. மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கும் வேடம் அஜீத்துக்கு. அதிக அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

தம்பி நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது, ஆனா இப்ப அவர் முன்னாடி நிக்காதீங்க என்று மருத்துவர் சொல்லும் காட்சி அஜீத்தின் நாயகத்தன்மையை பன்மடங்கு உயர்த்தும் காட்சி.

மூன்று பெண்களில் ஷ்ரதாஸ்ரீநாத் நடிப்பில் முந்துகிறார். நவரசங்களையும் வெளிப்படுத்த வேண்டிய வேடம். பொருத்தமாகச் செய்திருக்கிறார். அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகியோரும் குறை வைக்கவில்லை.

வில்லன்களாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், அர்ஜூன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன்,அஸ்வின்ராவ், சுஜித்சங்கர் ஆகியோரும் கொடுத்த வேடங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

வழக்குரைஞர்களாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே மை.பா.நாராயணன் ஆகியோரில் மை.பா அட்சர சுத்தமாகப் பொருந்துகிறார். பாண்டே கொடுத்த காசுக்கு அதிகமாகவே நடித்திருக்கிறார்.

ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் வருகிறார் வித்யாபாலன்.

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு காட்சிகள் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசையில் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் மொழிமாற்று இது. அஜீத்துக்காக ஒரு சண்டை ஒரு பாடல் ஆகியனவற்றைச் சேர்த்திருக்கிறார்கள்.

பெண்கள், ஆண் நண்பர்களுடன் சுற்றலாம், மது அருந்தலாம், அரை குறை ஆடை அணியலாம், வயது வந்தோருக்கான நகைச்சுவை சொல்லலாம் ஆனாலும் அவர்கள் வேண்டாமென்றால் அவர்களைத் தொடக்கூடாது என்னும் உயரிய சிந்தனையை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது படம்.

இந்தக் கருத்தை தமிழகத்திலும் சொல்ல நினைத்த இயக்குநர் எச்.வினோத், நடிகர் அஜீத், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

அதே சமயம், பெண்கள் ஒழுக்கம் சம்பந்தமான வெகுசன மனோபாவத்துக்கு எதிராக இப்படத்தில் பெண்கள் இருப்பதால் சொல்லப்படும் நல்ல கருத்துகள் அப்படியே மக்களுக்குப் போய்ச்சேருவது சந்தேகம்தான்.

முதல்பாதியில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களால் இரண்டாம் பாதி குறித்த எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் பாதி முழுக்க நீதிமன்றத்திலேயே நடக்கிறது. அஜீத் ரங்கராஜ் பாண்டே ஆகிய இருவரும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

சீக்கிரம் முடிங்கப்பா என்கிற அலுப்பே மிஞ்சுகிறது.

Related Posts