சினிமா செய்திகள்

என் தலை இவ்வளவு பெரிதா? இனி இதை வெளியிடாதீர் – மிஷ்கின் உத்தரவு

`தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜி.ராமாராவ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ஜூன் 14 அன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்றது.

அதில் இயக்குநர் ராம்பிரகாஷ்ராயப்பா, மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரன், அதுல்யாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மிஷ்கின் பேசியபோது, இப்படத்தில் என்னை நடிக்கக் கேட்டபோது முதலில் மறுத்துவிட்டேன். திரும்பவும் அவர் கேட்டபோது இரண்டு நிமிடங்களில் கதை சொன்னால் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதேபோல் இரண்டு நிமிடங்களில் கதை சொல்லி என்னை அசத்திவிட்டார்.

இந்தப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று அறிகிறேன். இதில் பணியாற்றிய அனைவரும் தங்களுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோள், படத்தின் சுவரொட்டி மற்றும் விளம்பரப் பதாகைகளில் மகாத்மா காந்தி படத்தை விட என் தலையைப் பெரிதாகப் போட்டிருக்கிறீர்கள். தயவுசெய்து அதை எடுத்துவிடுங்கள். மகாத்மாவின் முன்னால் நானெல்லாம் சிறுதுளி கூடக் கிடையாது. எனவே இனிமேல் இந்த போஸ்டரை வெளியிட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

வழக்கமாக என் படம் சின்னதாக இருக்கிறது என்றுதான் எல்லோரும் சண்டை போடுவார்கள். முதன்முறை பெரிதாக் இருக்கிறது வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.

இதைச் சற்றும் எதிர்பாராத இயக்குநர் மற்றும் வடிவமைப்பாளர் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Posts