October 29, 2020
சினிமா செய்திகள்

அஜீத் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியவர் இவர்தான்?

நேற்று (17.08.2020) அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……

சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளன.

இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

மேலும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்தத் தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகத் தொடர்பிலிருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்”

இவ்வாறு அஜித்தின் சட்ட ஆலோசகர் தெரிவித்திருந்தார்.

அஜீத்திடமிருந்து திடீரென இப்படி ஒரு அறிக்கை வெளியாகக் காரணம் என்ன? என்பது பற்றி திரையுலகில் உலவும் தகவல் இதுதான்.

விநியோகத்துறையில் இருந்த ராகுல் என்பவர் அஜீத்தின் நேர்கொண்டபார்வை விநியோகஸ்தர்களில் ஒருவராக இருந்தார்.அதற்கு முன்பாக விஸ்வாசம் படத்தின் வியாபாரத்தைக் கவனிக்க இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ராகுலை அஜீத்தே பரிந்துரைத்தார் என்று சொல்லப்பட்டது.

நேர்கொண்டபார்வைக்குப் பின்னர் போனிகபூருடனும் நெருக்கமாக இருக்கும் ராகுல் அவருடன் இணைந்து உதயநிதி நாயகனாக நடிக்கும் படமொன்றைத் தயாரிக்கிறார்.

இப்போது அஜீத், போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத்திடம் நட்பாக இருக்கிறார் என்று பெயர் பெற்ற ராகுல், போனிகபூருடன் இணைந்து படத்தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.

இதனால் அஜீத் படத்தின் வியாபாரம் மற்றும் அஜீத்தின் அடுத்த படம் ஆகிய விசயங்களில் ராகுலின் தலையீடு இருந்ததாகவும் அதனால் கோபமான அஜீத், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts