விமர்சனம்

மனுஷங்கடா – திரைப்பட விமர்சனம்

மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து சனவரி 3–2016 ஆம் தேதி மரணமடைந்தார். மழை காரணமாக, தலித் மக்களின் சுடுகாட்டுக்கு செல்லும் வழக்கமான பாதை சரியில்லாததால், பொதுப்பாதை வழியாக, உடலை எடுத்துச்செல்ல கோரிக்கை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவை கடந்த 4–ம் தேதி விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முதியவரின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கினார். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அறிக்கை தாக்கல் செய்யவும் நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தலித் முதியவரின் உடலை பொதுப் பாதை வழியே எடுத்து செல்ல, சாதி இந்துக்கள் மறுத்ததை அடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று புதிய பாதை அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், முதியவரின் உடலை புதிய பாதை வழியாக எடுத்துச் சென்று, அடக்கம் செய்யும்படி அதிகாரிகள் வலியுறுத்தியதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி பொதுவழிப்பாதை வழியாகவே எடுத்துச் செல்வோம் என்றும் முதியவரின் பேரன்கள் உறுதியாக தெரிவித்தனர்,

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 பேர், தங்களது உடலில் மண் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, தற்கொலை செய்துகொள்வதாக அறிவித்தனர். தொடர்ந்து , பொதுப்பாதை வழியாக அவரின் உடலைக் கொண்டுசெல்ல முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைத்தனர்.

பின்னர், காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள், வழக்கமான பாதையிலேயே (தலித் மக்கள் செல்லும், மழையில் சேதமாகி இருந்த வழக்கமான பாதை ) முதியவர் செல்லமுத்துவின் உடலைக் கொண்டு சென்று, அடக்கம் செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதியவர் செல்லமுத்துவின் உறவினர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வை திரைமொழியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அம்ஷன்குமார்.

திரைக்கதைக்காகச் சிற்சில மாற்றங்கள் செய்து தாழ்த்தப்பட்டோரின் வலிகளை சில இடங்களில் நேரடியாகச் சொல்லியும் பல இடங்களில் நமக்கு உணர்த்தியும் இருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் ராஜீவ் ஆனந்த் நாயகி ஷீலாராஜ்குமார், நாயகனின் தாயாக நடித்திருக்கும் மணிமேகலை, ஊர்த்தலைவர் சேது டார்வின் வழக்குரைஞர் கருணாபிரசாத் ஆகியோர் தங்கள் பொருத்தமான நடிப்பால் கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பி.எஸ்.தரணின் ஒளிப்பதிவு நன்று. சில இடங்களில் அசையாமல் நின்று கதை சொல்கிறது.

தன் தந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடம் எது என்று தெரியாமல் நாயகன் கதறி அழும் போது, இன்குலாப்பின்..

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

பாடல் ஒலிக்கிறது. அதோடு படம் முடிகிறது. ஆனால் சமுதாயத்தில் இதற்கு முடிவில்லை எனும் உண்மையால் மனம் வலிக்கிறது.

Related Posts