விமர்சனம்

மண்டேலா – திரைப்பட விமர்சனம்

தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. 

திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. 
அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத் திகட்டச் சொல்லியிருக்கும் படம்தான் மண்டேலா.

டேய் இளிச்சவாயா? என்றழைப்பதை எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஏற்றுக்கொண்டு அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வது, பேர் கேட்போரிடம் பெருமிதமாக ஸ்மைல் என்று சொல்வது, மண்டேலா என்கிற பெயர் வந்தவுடன் நடக்கும் மாற்றங்களை எதிர்கொள்வது என எல்லா இடங்களிலும் பிரகாசிக்கிறார் யோகிபாபு.

அவ்ர் கூடவே வருகிற சிறுவன் பாத்திரமும் அதன் எதிர்ப்புணர்வுகளும் தற்கால தலைமுறைகளைப் பிரதிநிதித்துவம் செய்திருக்கிறது. அதற்கேற்ப நடித்து அனைவரையும் கவர்கிறார் அவர்.

படத்தின் நாயகி ஷீலாராஜ்குமார்.அவருடைய அறிமுகம் அட்டகாசம். வறுமைக்கோட்டில் வாழ்கிற மூத்த இளம்பெண்களைக் கண்முன்னால் நிறுத்துகிறார். அஞ்சல் அதிகாரி வேடத்துக்கு அவ்வளவு பொருத்தம். யோகிபாபுவின் நிலைகண்டு இரங்குவதும் அவருடைய மாற்றம் கண்டு பொங்குவதும் சிறப்பு.

ஊராட்சித்தலைவராக நடித்திருக்கும் சங்கிலி முருகன் அசத்தியிருக்கிறார். கொள்கைப் பிடிப்புள்ள அரசியல் தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாய் அவருடைய வேடம் இருக்கிறது. சில குறைகளுடன்.

சங்கிலிமுருகனின் மூத்த மகன் ரத்தினமாக படத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை வரும்  சத்யா சுந்தர் என்றழைக்கப்படும் ஜி.எம்.சுந்தர், தன் பண்பட்ட நடிப்பால் படத்தை சுவாரசியமாக்குகிறார். அவருடைய தோற்றம் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறது.

சங்கிலிமுருகனின் இளையமகன் கன்னாரவிக்கு முறுக்கிக் கொண்டு திரியும் வேடம். நன்றாகச் செய்திருக்கிறார்.
இவர்கள் தவிர படத்தில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருப்பவர்களும் கனகச்சிதமாக இருக்கிறார்கள்.

விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் இயல்பு.

பரத்சங்கரின் இசையில் பாடல்கள் படத்தோடு இசைந்துவருகிறது. பாடல் வரிகளில் ஆழம்.

படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் படத்த்ன் சுவையைக் கூட்டியிருக்கிறார்.

தூய்மை பாரத இயக்கம் என்கிற பெயர்ப்பலகை,  டிஜிட்டல் இந்தியா பற்றிய கிண்டல்,யோகிபாபுவுக்கு நெல்சன் மண்டேலா என்று பெயர்,இரண்டு மனைவி கொண்ட அரசியல் தலைவர், அவரை அறிமுகம் செய்யும் காட்சியில் தந்தை பெரியார் படம்,அவருடைய வாரிசுகள் இருவரும் ஆளுக்கொரு சாதி என்பது உட்பட   ஒவ்வொரு காட்சியிலும் சமகால அரசியல் குறியீடுகளை வைத்து ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குநர் மடோன் அஷ்வின்.

அரசியல் கட்சிக் கரை போட்ட துண்டை மலம் துடைக்கப் பயன்படுத்தியிருப்பது கூர்மையான விமர்சனம்.

கேட்டாலே போரடிக்கக்கூடிய விசயங்களை படம் முழுக்கக் கையாண்டிருந்தாலும் சிரித்துக் கொண்டே பார்க்க வைத்து பின்பு சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

படத்தின் நாயகனை முடிதிருத்துபவராகவும் அவரால் ஊருக்கு நடக்கும் நன்மைகளையும் சொல்லியிருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

தேர்தல் நேரத்தில் நம் ஒவ்வொருவரின் வாக்குக்கு உள்ள வலிமையை நமக்கு உணர்த்துகிறார்கள். அதிகார மமதையில் இருப்பவர்களையும் அடிபணியச் செய்யும் ஆற்றல் உள்ளது ஓட்டு என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரம் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் அந்த ஆற்றலும் எளியவர்களிடமிருந்து பறிக்கப்படும் அச்சத்தையும் வெளிப்படுத்தியிருக்கலாம்.

தேர்தலில் போட்டியிடும் இருவரில் யார் வென்றாலும் ஊரைப் பாதிக்கக் கூடிய தொழிற்சாலை வரும் என்று சொல்லியிருப்பதால் இந்தப்படத்திலும் மக்கள் தோற்கிறார்கள்.

இப்படம் மூலம் இக்கால இளையோருக்கு நெல்சன் மண்டேலா என்கிற பெரும்போராளியை அறிமுகப்படுத்திய இயக்குநர் மடோன் அஷ்வினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது. 

திரையரங்குகளில் வந்திருக்க வேண்டிய படம்.

Related Posts