விமர்சனம்

மாயோன் – திரைப்பட விமர்சனம்

ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். 

அவர்கள் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் மாயோன்.

தொல்பொருள் துறையில் பணியாற்றும் துடிப்புமிக்க அதிகாரியாக சிபிராஜ் வருகிறார். துறைசார்ந்த அறிவு, சமயோசித புத்தி , அதிரடிச் சண்டை எனப் பல வாய்ப்புகள் அவருக்கு. அவ்வளவிலும் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.

அந்தத்துறையிலேயே பணியாற்றுகிறார் நாயகி தான்யா. அதனால் படம் நெடுகப் பயணிக்கும் வாய்ப்பு. 

கே.எஸ்.ரவிக்குமார், ஹரீஷ்பேரடி, ராதாரவி, பக்ஸ், மாரிமுத்து உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். அனுபவ நடிகர்கள் என்பதால் காட்சிகளிலும் அது நிறைந்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவில் பழங்காலக் கோயிலின் உள்ளும்புறமும் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. பறவைப்பார்வைகள் அழகு. 

இளையராஜாவின் இசையில் பாடல்கள் படத்தோடு இயைந்திருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டுகின்றன.

ஒரு திரைப்படம்தான் எடுக்கிறோம் என்று நினைக்காமல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போல், பழங்காலக் கோயில்கள் அவற்றின் அமைப்புகள் அவற்றிலுள்ள வியப்புகள் ஆகியனவற்றைப் பட்டியலிட்டு அதற்கும் அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நிறுவ முயன்றிருக்கிறார் கதை எழுதியிருக்கும் அருண்மொழி மாணிக்கம்.

அவருடைய உழைப்பின் மூலம் பழங்காலக் கோயில்கள் பற்றியும் அங்கு காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் பழக்கவழக்கங்கள் பற்றியும் புதியபார்வைகள் விரிகின்றன.

இயக்கியிருக்கிறார் என்.கிஷோர். நிறைய நடிகர்கள் அவர்களிடம் தேவையான அளவு வேலை வாங்கி விறுவிறுப்பாகப் படத்தைக் கொண்டு சென்றிருகிறார். 

படத்தின் இறுதியில் நிகழும் திருப்பங்கள் சுவாரசியமானவை.

Related Posts