விமர்சனம்

மாமனிதன் – திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம்.

தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம் நாயகி காயத்ரியைக் கைபிடிக்கிறார்.

ஓர் ஆண்குழந்தை, ஒரு பெண் குழந்தை அமைந்து அழகாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இன்னும் நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசையில் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு நிலத்தரகர் வேலைக்குப் போகிறார். போன இடத்தில் பெரும் சிக்கல். அதனால் ஊரைவிட்டே போகவேண்டிய சூழல் விஜய்சேதுபதிக்கு.

அதன்பின் என்னவாகிறது? அவர் ஊரைவிட்டுப் போனபின்பு அவருடைய குடும்பம் என்னவானது? மீண்டுவந்தாரா? என்பனவற்றிற்கான விடைகளாக இருக்கிறது மாமனிதன்.

குழந்தைகளோடு குழந்தையாக மனைவியிடம் காதலனாக ஊராருக்கு நல்லவனாக உற்றவருக்குத் தோழனாக நிர்க்கதியாக நிற்கும்போது கதிகலங்க வைப்பவராக என வழக்கம்போல் இந்தப்படத்திலும் சிறப்பாக நடித்து வேடத்துக்குப் பலம் சேர்க்கிறார் விஜய்சேதுபதி.

அவருக்கு ஏற்ற இணையராக காயத்ரி. திடீரென எல்லாம் மாறும் நேரத்தில் திகைத்து நிற்கும் காட்சிகளில் நம்மையும் திகைக்க வைக்கிறார்.

படத்தில் மூன்றாவது முக்கிய நபர் குரு.சோமசுந்தரம்.இஸ்லாமியர் வேடம். ஒரு மில்லிமீட்டர் கூடக்குறைய இல்லாமல் சரியாக இருக்கிறார்.

ஷாஜி,சரவணசக்தி, ஜ்வெல்மேரி, அனைகா, கே.பி.ஏ.சி.லலிதா, கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் சிறப்பு.

சுகுமாரின் ஒளிப்பதிவில் பண்ணைப்புர அழகு, கேரளாவின் இயற்கைச் சூழல், காசியின் காவிச்சூழல் ஆகியன அளவாகப் பதிவாகியிருக்கின்றன.

இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா இணைந்து இசையமைத்திருக்கும் படத்தில் பாடல்கள் சாதாரணமாகக் கடந்து போகின்றன என்பது ஏமாற்றம்.

படிக்காத தற்குறி, தான் தோற்றுப்போன ஊரிலேயே மிகவும் போராடி தன் பிள்ளைகளை வளர்த்தெடுக்கிறார் என்பதால் சாதாரண மனிதன் மாமனிதன் ஆகிறான் என்பது இயக்குநர் சீனுராமசாமியின் கருத்து.

மேம்போக்காகப் பார்த்தால் நெகிழ்வான கதை என்பதுபோல் தோன்றும் இந்தக் கதைக்குள் அவ்வளவு பிழைகள் மற்றும் பிற்போக்குத்தனங்கள்.

என் பிள்ளைகள் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காகச் சிறப்பாக இரசித்துச் செய்கிற வேலையை விட்டுவிட்டு நிலத்தரகராக ஆகிறார் என்கிற இடத்திலேயே விஜய்சேதுபதியின் குணநலனைக் கீழே இறக்கிவிட்டுவிடுகிறார் இயக்குநர்.

அதன்பின், ஊரைவிட்டு ஓடிப்போய் மறைமுகமாக உதவிசெய்கிறார் என்கிற அபத்தம் வேறு. அவரைத் தூண்போல் நம்பியிருக்கும் குடும்பத்தை விட்டுவிட்டு ஓடினால்? அதுவும் ஏமாந்த மக்கள் மத்தியில்? அவர்கள் எவ்வளவு வேதனைகள் மற்றும் சோதனைகளுக்கு ஆளாவார்கள்? என்பது புரியாதவர் எப்படி மாமனிதராக முடியும்?

நிர்க்கதியாக நிற்கும் காயத்ரி, குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டிருந்தால்?

அப்புறம் ஒரே ஊருக்குள் இருக்கும் உற்ற நண்பருக்கு விஜய்சேதுபதி போனபின்பு அந்தக் குடும்பம் என்னவாகிறது என்பது தெரியாதா? பையன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போவது தெரியாதா? சோற்றுக்கு வழியில்லாமல் அலைவது தெரியாதா?

எல்லாம் நடந்து முடிந்த பிறகு சாவகாசமாக காய்த்ரி குரு.சோமசுந்தரம் சந்திப்பு நடக்கிறது என்பது பொருத்தமாகவே இல்லை. ஒரு இஸ்லாமியர் மதமாச்சரியங்களைக் கடந்து உதவி செய்கிறார் என்பதையும் பொய்யாக்கி, அவர் பணம் அனுப்பினால் இவர் கொடுப்பார் என்று காட்டியிருப்பதில் ஏதும் உள்நோக்கம் இருக்கிறதா?

இதுபோதாதென கடைசியில் காசிக்குப் போய் புண்ணியம் சேர்க்கிறேன் என்கிற கதை வேறு. இவர் காசிக்குப் போனால் பணத்தை இழந்தவர்களுக்குத் தீர்வு கிடைத்துவிடுமா? அவர்கள் மன அமைதி பெற்றுவிடுவார்களா?

இப்படி படத்தில் ஏராள பிழைகள்,பிற்போக்குத்தனங்கள். பல நல்ல படங்களைக் கொடுத்திருக்கும் சீனுராமசாமியிடம் இப்படி ஒரு சீழ்பிடித்த சிந்தனையைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கதையிலும் நடையிலும் தெளிவு இல்லை என்பதால் திரையிலும் அது எதிரொலிக்கிறது. இரண்டு மணி நேரமே இருபது மணி நேரம் போல் போகிறது.

Related Posts