சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகிறார் லோகேஷ் கனகராஜ் – காரணம் என்ன?

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கப்போகிறார் என்றும் அப்படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.

இதுமட்டுமின்றி, தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கி  புதியபடங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ்கனகராஜ்.

மூன்று படங்களை இயக்கியதும் பணம் நிறையச்சேர்ந்துவிட்டதா? ஏன் படம் தயாரிக்க முன்வருகிறார்? 
இப்போதுள்ள இளம் இயக்குநர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். ஒருவர் படத்தில் அடுத்தவர் ஏதாவதொரு வேலை பார்ப்பது என்றிருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜுடனும் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் உள்ளிட்ட சிலர் பணியாற்றிவருகிறார்கள்.

அவர்கள் நல்ல திரைக்கதைகளுடன் தயாரிப்பாளர் தேடி அலைவதைப் பார்த்த லோகேஷ் கனகராஜ், நாமே படம் தயாரிப்போம் என்கிற முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.அவர் தயாரிப்பில் முதல் படத்தை ரத்னகுமார் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சேர்ந்து ஜெயிப்போம் என்று களமிறங்கும் புதியபட்டாளம் வெற்றி பெறுவது திரையுலகுக்கு நல்லது.  

Related Posts