சினிமா செய்திகள்

40 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

நாற்பது வருடங்களுக்குப் பிறகு  வருகிறது இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று. அதன் பெயர் “கோமாளி கிங்ஸ்”
முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படம்.
இத்திரைப்படத்தை கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்படக் கலைஞரான எம்.எஸ்.இரத்தினத்தின் பேரனாவார். இது கிங் ரட்ணம் இயக்கும் முதலாவது படமாகும்.
இந்தப் படத்தில் இயக்குநர் கிங் ரட்ணமே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் சத்யப்பிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜ கணேசன், கமலஸ்ரீ மோகன், நிரஞ்சனி சண்முகராஜா, அட்ரி அபிலாஷ், கஜன் கணேசன், நேகிதா ரிஷானி, கமல்ராஜ் பாலகிருஷ்ணன், ஜி.கே.ரெஜினால்டு எரோஷன், அனுஷ்யந்தன், பிரியந்தா ஸ்ரீகுமாரா, உதயகுமார், தர்ஷன் தர்மராஜ், நவயுக ராஜ்குமார், கேமிலோ ரட்ணம், பிரியதர்ஷிணி, ஜூலியானா ஜான் பிலிப், தயா வயாமேன், டேவிட், கோபி ரமணன், பத்துராஜன் விஜிசேகரன், பிரியா லுவேந்திரன், ஜோஸூவா ரட்ணம், டல்சன் டெனோஸ், ஜெரோம், ஷீலு மற்றும் பல இலங்கை தமிழ்க் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக மகிந்த அபேசிங்காவும், இசையமைப்பாளராக ஸ்ரீராம் சச்சியும், படத் தொகுப்பாளராக அஞ்சேலோ ஜோன்ஸும் பணியாற்றியுள்ளனர்.
கிட்டத்தட்ட 40 வருட கால இடைவெளிக்குப் பிறகு முற்றிலும் இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு முழு நீள தமிழ்த் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் கிங் ரட்ணம்,
“இலங்கை உட்பட உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழ் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளிக்கும்வகையில் குடும்பப் பாங்கான கதையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இலண்டனிலிருந்து உறவினரின் திருமணத்திற்காக தாயகம் திரும்பும் ‘PAT’ எனப்படும் பத்மநாதன் குடும்பத்தாருக்கு இலங்கையில் ஏற்படும் எதிர்பாராத சில சம்பவங்களும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும்தான் படத்தின் திரைக்கதை.நகைச்சுவை, காதல், அதிரடி, திரில், சஸ்பென்ஸ் என்று படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரையிலும் பார்வையாளர்களை கதையோடும், காட்சிகளோடும் ஒன்றிணையும்வகையில் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் தமிழ் மொழியை படத்தின் பல கதாபாத்திரங்களும் பேசியிருக்கின்றனர். இலங்கையின் தனித்துவமான தமிழ் மொழி பாவனைக்கு இத்திரைப்படம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதனால் இலங்கையில் வாழும் அனைத்து வகையிலான தமிழர்களும் இத்திரைப்படத்தை ரசிப்பார்கள் என்பது உறுதி.
இத்திரைப்படம் மிக விரைவில் இலங்கை முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. தலைநகரம் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு, மலையகம் என்று அனைத்துப் பகுதிகளிலும் இத்திரைப்படம் திரையிடப்படும்.இந்த ‘கோமாளி கிங்க்ஸ்’ திரைப்படம் இலங்கையில் இருக்கும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு புனர்ஜென்மம் கொடுத்திருக்கிறது என்றுகூட சொல்லலாம்.
மிக விரைவில்  இந்தியாவிலும் குறிப்பாக  தமிழகத்திலும் கோமாளி கிங்ஸ்-திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சில் ஈடுபட்டிருப்பதாகவும் இயக்குநர் கிங் ரட்ணம் கூறுகிறார்.

Related Posts