விமர்சனம்

கொளஞ்சி – திரைப்பட விமர்சனம்

பனிரெண்டு வயதுடைய சிறுவன் கொளஞ்சிக்கு, அப்பாவும் அவருடைய கட்டுப்பாடுகளும் வேம்பாகக் கசக்கிறது. அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. இச்சிக்கலை உளவியல் ரீதியாக அணுகித் தீர்வு சொல்கிற படம்தான் கொளஞ்சி.

கொளஞ்சியாக நடித்திருக்கும் கிருபாகரன், வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். அடிவாங்கியாக நடிக்கும் சிறுவன் பேசுபவை அனைத்தும் சிரிப்புவெடி. சிந்திக்கவும் வேண்டியவை..

படம் முழுக்க கறுப்புச்சட்டை அணிந்து மிக நிதானமாகப் பெரியார் கொள்கைகளைப் பேசுகிறார் சமுத்திரக்கனி. முரண்படும் மகன் பற்றிய வேதனையுயுைம்,அதை எப்படிச் சரி செய்வது என்கிற தடுமாற்றத்தையும் தன் நடிப்பில் வெளிப்படுத்துகிறார் சமுத்திரக்கனி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சங்கவி.சமுத்திரகனி மனைவி, இரண்டு பையன்களுக்கு அம்மாவாக கொங்குதமிழ் பேசி வளையவந்து கவர்கிறார்.

ராஜாஜி, நேனாசர்வார் ஆகியோர் இளம் இணையர். காதல்காட்சிகள், பாடல்களுக்குப் பயன்படுகிறார்கள். கொளஞ்சியின் வயிற்றுப்போக்குக்கு மருந்து என்று சொல்லிவிட்டு அவர்கள் செய்யும் சேட்டைகள் இளமை சுவாரசியம்.

கறுப்புச்சட்டைக்கு எதிராகக் காவிச்சட்டை அணிந்து அடாவடி செய்யும்வேடத்தில் இயக்குநர் மூர்த்தி நடித்திருக்கிறார். மக்களிடம் தமக்கு ஆதரவில்லை என்று மறுகி அந்த ஆத்திரத்தில் பல தவறுகளைச் செய்கிறார்.

விஜயன் முனுசாமியின் ஒளிப்பதிவு, கிராமத்து வீடுகளை ரசிக்க வைக்கிறது.

நடராஜ் சங்கரனின் இசை பொருத்தம். தமிழர்களின் பெருமை பேசுகிற பாடல் நன்று.

ஒரு மெல்லிய கதையை எடுத்துக் கொண்டு அதில் சமுதாயத்துக்குத் தேவையான பல நல்ல விசயங்களை வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள் இப்படத்தின் தயாரிப்பாளர் மூடர்கூடம் நவீனும், இப்பட இயக்குநர் தனராம் சரவணனும்.

கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனராம் சரவணன்.

இன்றைய நிலையில் கறுப்புச்சட்டையின் தேவையை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார் மூடர்கூடம் நவீன். அதற்காக அவரைப் பாராட்டலாம்.

Related Posts