October 25, 2021
Uncategorized சினிமா செய்திகள்

தள்ளிப்போட்ட கார்த்தி தவிக்கும் தயாரிப்பாளர்

கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து நாளை முதல் முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண்குமார் கடும் வேதனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவருக்கு ஏன் வேதனை?

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படமொன்றின் அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி நாளில் வெளியானது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியன ஏப்ரல் 25,2021 அன்று வெளியானது.

படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி ரெஜிஷாவிஜயன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

அப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ், ஓளீப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.

சர்தார் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்ததோடு நிற்கிறது.

பொன்னியின்செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகச் சொல்லியிருந்தாராம் கார்த்தி.

எனவே, அதற்காகப் பெரும் தொகையைக் கடன் பெற்று சர்தார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் தயார் ஆகியிருக்கிறார் இலட்சுமண்குமார்.

திடீரென, சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதாகவும் அப்படத்தை வேகமாக முடித்துவிட்டு சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் சொல்லிவிட்டார் கார்த்தி.

இதுதான் அவருடைய வேதனைக்குக் காரணம்.

இந்தப்படத்துக்காகப் பெரும் தொகையை வட்டிக்கு வாங்கியிருப்பதால் மேலும் சில மாதங்கள் கூடுதலாக வட்டி கட்ட வேண்டிய நிலை. அதுவும் பெரும்தொகையாக இருக்கிறதாம்.

இதற்கு முன்னால் வாங்கியவற்றைவிட இப்போது வாங்கப்பட்டிருக்கும் தொகைக்கான வட்டி அதிகமாகிக் கொண்டே போகிறதாம்.

எல்லாம் தெரிந்திருந்தும் கார்த்தி ஏன் இந்தப்படத்தைத் தள்ளிப்போட்டார் என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர்.

Related Posts