சினிமா செய்திகள் நடிகர்

திருப்பி அடித்த கமல் திகைத்து நிற்கும் நிறுவனம்

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரமிட் சாய்மீரா’ என்ற நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு `மர்மயோகி’ என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் 100 கோடி தயாரிப்பில் உருவாகத் திட்டமிட்ட இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் படம் தொடங்கப்படாமல் டிராப் ஆனது. இதையடுத்து தயாரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ரூ.6.90 கோடியைக் கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில், மர்மயோகி படத்துக்குக் கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி ரூபாய் கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி பிரமிட் சாய்மீரா நிறுவனம் சமீபத்தில் புதிய வழக்கு தொடர்ந்தது.

இதனால் விஸ்வரூபம் 2 படம் வெளியாவதில் சிக்கல் உருவானது. இவ்வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, வாதாடிய கமல் தரப்பு, “மர்மயோகி படத்தில் நடிப்பதற்காகவும் இயக்குவதற்காகவும் ரூ.4 கோடி முன்பணமாகப் பெற்றேன். இந்தப் பணம், படத்தின் ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொள்வதற்கே சரியாக இருந்தது. படத்தை மேற்கொண்டு எடுக்க சாய்மீரா பணம் தரவில்லை. இதனால் படம் தடைபடும் சூழ்நிலை உருவானது. எனினும், மர்மயோகி படத்துக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பித் தருவேன்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அந்தப்படத்துக்கு வேறு தயாரிப்பாளர் எப்போது கிடைப்பது? இவர் எப்போது பணத்தைத் திருப்பிக் கொடுப்பது? வழக்குப் போட்டால் பணம் கிடைக்கும் என்று நினைத்த பிரமிட் சாய்மீரா,பணம் இருந்தால் படம் எடுப்பேன் என்று கமல் திருப்பி அடித்ததால் இப்போது திகைத்து நிற்கிறதாம்.

Related Posts