September 18, 2020
சினிமா செய்திகள்

கமல் 232 பட அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டது எதனால்?

கமலின் ராஜ்கமல் நிறுவனம் கமல் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. அந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பை மாலை 6 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து செய்திக்குறிப்பு அனுப்பப்பட்டது.

கமலின் 232 ஆவது பட அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதலில் வெளியிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம்.

நாளை புரட்டாசி மாதம் பிறக்கவிருக்கிறது. பொதுவாக ஆடி,புரட்டாசி ஆகிய மாதங்களில் புதிய விசயங்களைத் தொடங்குவது அல்லது அறிவிப்பது போன்றவற்றைத் திரையுலகினர் செய்யமாட்டார்கள்.

அதனால் ஆவணி மாதக் கடைசி நாளான இன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டால் பகுத்தறிவு பேசுகிற கமல், புரட்டாசி மாதத்தைப் புறக்கணித்து மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டு இன்று புதியபட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிற விமர்சனம் வரும் என்பதால் கமல் தயங்கியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் புரட்டாசி மாதத்தில் புதிய பட அறிவிப்பை வெளியிட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விரும்பவில்லையாம். எனவே அவர் விருப்பப்படி இன்று அவரையே வெளியிடச் சொல்லிவிட்டாராம் கமல்.

Related Posts