February 17, 2020
சினிமா செய்திகள்

கடைசி நேர சிக்கலிலும் மீண்டது காப்பான் – படக்குழு நிம்மதி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

தன்னிடம் கேட்ட கதையை, காப்பான் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் எழுதிய தன்னுடைய கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கூறியதாகவும், எதிர்காலத்தில் இந்தக் கதையைப் படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தற்போது காப்பான் படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறியிருந்தார்.

இது தொடர்பாக இயக்குநர் கே.வி ஆனந்த்தின் பதில் மனுவில் வழக்கு தொடர்ந்த நபரைத் தெரியாது என்றும், வீண் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதில் மனுக்களை ஏற்று காப்பான் படத்திற்கு எதிரான வழக்கை செப்டம்பர் 9 ஆம் தேதி தள்ளுபடி செய்து தனி நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில் தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ஜான் சார்லஸ் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் காப்பான் படத்துக்குக் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்து நாளை படம் வெளியாகவிருக்கிறது. இதனால் படக்குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

Related Posts