September 23, 2020
விமர்சனம்

காப்பான் – திரைப்பட விமர்சனம்

இயற்கை விவசாயம் செய்து மண்ணைப் பாதுகாக்கும் விவசாயி, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றி நாட்டையும் பாதுகாப்பதால் இவர் காப்பான்.

இராணுவ உளவுப் பிரிவு, பிரதமரின் சிறப்புப்பாதுகாப்புப் பிரிவு  தமிழக விவசாயி ஆகிய மூன்று பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் சூர்யா.

மூன்றுக்கும் பொருத்தமாக இருக்கிறார் என்பதைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இராணுவம் போல் விவசாயமும் ஒரு சேவை. அவையிரண்டும் நாட்டைப் பாதுகாக்கக் கூடியவை என்பதை உரத்துச் சொல்லியிருக்கிறார்.

பிரதமராக மோகன்லால் நடித்திருக்கிறார். அந்தப் பொறுப்புக்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார்.

ஆர்யாவுக்கு இந்தப்படத்தில் பெரிய பொறுப்பு.வேடத்துக்கேற்ற மாதிரி ஆர்யா இல்லை. ஆர்யாவின் இயல்புக்கேற்ப அந்த வேடம் இருக்கிறது. அதனால் ஏற்க முடியவில்லை.

சாயிஷா அழகான காதலியாக மட்டுமின்றி பொறுப்பான அதிகாரியாகவும் இருக்கிறார். சூர்யாவுடனான காதல் காட்சிகளில் இழைகிறார்.

தொழிலதிபர் அம்பானியை நினைவு படுத்தும் வேடத்தில் பொம்மன் இரானி. அதற்கேற்ப இறுமாப்புடன் நடித்து வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

வேட்டி சட்டையிலிருந்து கோட் சூட்டுக்கு மாறி அதற்கும் பொருத்தமாக இருக்கிறார் சமுத்திரக்கனி. வில்லனாக வருகிற சிராக்ஜானி கவனிக்க வைக்கிறார்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் தமிழக விவசாயமும் காஷ்மீரின் அழகும் டெல்லியின் இறுக்கமும் சரியாகப் பதிவாகியிருக்கின்றன்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.படத்தின் கடைசியில் வருகிற கபிலன் எழுதியுள்ள குறிலே குறிலே குயிலே பாடல் ரசிக்கவைக்கிறது. அந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடங்கள் மிக அருமை.படம் முடிந்தபின் பாடல் வந்தாலும் நின்று பார்க்கத் தூண்டுகிறது.

இந்தியப் பிரதமர் குறித்த கதை என்பதால் காட்சிகளின் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. ஒரு பிரதமர் என்றும் பாராமல் இவ்வளவு கொலை முயற்சிக் காட்சிகள் வைக்கலாமா? இயக்குநர் கே.வி.ஆனந்த் இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

ஒரு பிரதமர் இப்படி நடக்கலாமா? என்கிற மாதிரி இருக்கின்றன ஆர்யா பிரதமராக வருகிற காட்சிகள். கடைசியில் தமிழகம் குறித்த அவருடைய அறிவிப்பு இப்படி ஒரு பிரதமர் இருக்கமாட்டாரா? என ஏங்கவைத்துவிட்டது.

Related Posts