சினிமா செய்திகள்

இளையராஜா மீது காவல்துறையில் புகார்

இசை சம்பந்தமான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா திடீரென இயேசு உயிர்த்தெழுதல் குறித்துப் பேசினார். இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆராய்ச்சி செய்து யூடியூபில் போடுகிறார்கள் என்று ஆவணப்படத்தை மேற்கொள் காட்டினார். மேலும், உண்மையான உயிர்த்தெழுதல் ரமண மகரிஷிக்கு நிகழ்ந்தது என்றும் அவர் பேசினார்.

கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் விமர்சித்துப் பேசிய இளையராஜாவுக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த கிறிஸ்தவ அமைப்பினர் காவல் ஆணையரிடம் இளையராஜா குறித்து புகார் அளித்தனர்.

இது தொடர்பாக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையானது, இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே. இந்த வாரம் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் இருக்கின்ற திருச்சபைகளில் எழுச்சியாகக் கொண்டாட உள்ளோம்.

இந்தத் தருணத்தில் இசையமைப்பாளர் இளையராஜா சமூக வலைதளத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதனால் கிறிஸ்துவர்களாகிய எங்கள் மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் கொந்தளிப்பும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத உணர்வை புண்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே கிறிஸ்தவர்களின் மனதைப் பெரிதும் வேதனைப்படுத்திய இளையராஜா மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பேட்டி அளித்த அவர்கள் “இயேசு உயிர்த்தெழவில்லை என்று கூறிய இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்து கிறிஸ்தவர்களாகிய எங்களுடைய மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது, வருகின்ற மார்ச் 31 க்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ஏப்ரல்-1 ஞாயிற்றுக்கிழமையான ஈஸ்டர் திருநாளில் இளையராஜா வீட்டை கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Related Posts