விமர்சனம்

கேம் ஓவர் – திரைப்பட விமர்சனம்

பெற்றோரை விட்டு விட்டு ஒரு பெரிய வீட்டில் வேலைக்கார அம்மா துணையுடன் வசிக்கிறார் தாப்சி வீடியோகேம் உருவாக்கம் அவரது வேலை வீடியோகேம் விளையாடுவது அவருடைய பொழுதுபோக்கு.

அவருடைய கையில் வீடியோகேம் பிளேயர் வடிவில் பச்சை குத்திக்கொள்கிறார். பச்சை குத்திக் கொண்ட இடத்தில் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் அதை நீக்கப் போகிறார்.

பச்சை குத்தியதில் ஒரு பிழை நேர்ந்திருக்கிறது. அதிர்ந்து போகிறார் தாப்சி. அதன்பின் அவருக்கு தொடர் துன்பங்கள். அவற்றிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பது படம்.

படம் நெடுக ஒன்மேன் ஆர்மி போல தாப்சியே வருகிறார். கவனிக்க வைக்கிறார். எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம். சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடுத்ததாக கலாம்மாவாக வருகிற வினோதினி. கொடுத்த வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். வேலைக்கார அம்மாவாக இல்லாமல் தாப்சியின் சொந்த அம்மா போல கவனிக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

ஏ.வசந்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதைக்குத் தேவையான அளவு லைட்டிங் செய்திருக்கிறார். சில காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

ரான்எதான்யோகனின் பின்னணி இசை இயக்குநரின் எண்ணத்தை நிறைவேற்றுகிறது.

ஊருக்குள் நடக்கிற சைக்கோ கொலைகள், தாப்சியின் வாழ்வில் புத்தாண்டு அன்று நடந்த கொடூரம், பச்சை குத்துவதால் ஏற்படுகிற விளைவுகள் உட்பட பல அடுக்குகளில் அமைந்த திரைக்கதை புத்திசாலித்தனம்.

முதல்பாதியில் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வருவது படத்தின் பெரிய பலவீனம்.

இரண்டாம் பாதியின் இறுதிப்பகுதி மிக விறுவிறுப்பு. இயக்குநர் அஸ்வின் சரவணனின் வித்தியாச முயற்சி பாராட்டுக்குரியது.

பல அடுக்குகளாக இல்லாமல் இயல்பான கதை சொல்லலாக இருந்திருந்தால், என்னால் எதையும் மாற்றமுடியாது என்று கலங்கவேண்டியதில்லை எந்த நிலையிலும் மன உறுதியோடு போராடினால் மாற்ற முடியும் என்கிற கருத்து எல்லோருக்கும் போய்ச்சேர்ந்திருக்கும்.

Related Posts