சினிமா செய்திகள் விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்

ஆபத்தில் இருக்கும் காதலியைத் தேடிச் செல்லும் காதலனின் மீது பாய்கிறது அசுர தோட்டாக்கள்… பிரச்னைகளைத் தாண்டி காதலியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. கெளதம் – தனுஷ் காம்போவில் ‘எனைநோக்கி பாயும்தோட்டா’ எப்படி இருக்கிறது?

நாயகன் தனுஷின் மீது தோட்டா பாயும்போது கதை துவங்குகிறது. காக்க காக்க ஸ்டைடில் கதைச் சொல்ல துவங்குகிறார் நாயகன். வாரணம் ஆயிரத்தில் மேக்னாவை பார்த்ததும் காதலில் விழுவது போல, மேகா ஆகாஷை பார்த்ததும் காதலில் விழுகிறார் தனுஷ். நீதானே என் பொன்வசந்தம் வருண் – நித்யா ஜோடி மாதிரி… அப்படி ஒரு க்ளாசிக் காதல். விடிவி மாதிரி, சந்தோஷமா போகுற வாழ்க்கையில் திடீரென ஒரு பிரச்னை. அச்சம் என்பது மடமையடா சிம்பு மாதிரி, என்ன ஆனாலும் பரவாயில்லை….அவளை எப்படியாவது காப்பாத்துவேன்னு முடிவெடுக்கும் தனுஷ். என்னை அறிந்தால் மாதிரியான தோட்டா தெறிக்கும் ஆக்‌ஷன். இறுதியாக, நாயகன் தனுஷ் கையில் இருக்கும் துப்பாக்கியிலிருந்து தோட்டா பாயும் போது கதை முடிகிறது. இதுதான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ கதை.

அசுர நடிப்பை ஏற்கெனவே தனுஷ் காட்டிவிட்டார். இந்தமுறை, கிளாஸியான லுக். பாஷான நடிப்பு. எந்த குறையும் எப்பொழுது தனுஷிடம் சொல்லிவிட முடியாது. உடல்மொழியிலும், சண்டைக் காட்சியிலும், காதலில் உருகும் போதும், அண்ணனுக்காக கண்ணீர் விடும் போதும் என மனுஷன் பின்னி எடுக்குறார். எப்போதுமே தனுஷ் சர்ப்ரைஸ் தான்.

சொல்லப்போனால் நாயகி மேகா ஆகாஷூக்கு முதல்படமாக இதுதான் வெளியாகியிருக்க வேண்டும். இது அறிமுக படமென்பது நடிப்பில் தெரிகிறது. மேகா ஆகாஷின் நடிப்பை கவனிக்க முடியாத அளவுக்கு, அழகினால் கொள்ளை கொள்கிறார். சிரிப்பு, பார்வை, அழுகை, முத்தம் என மொத்தமாக உரைய வைக்கிறார்.

படத்தில் மிக முக்கியமான மூன்றாவது கதாபாத்திரம் சசிகுமார். வித்தியாசனா ரோல். நச் லுக். மாஸ் காட்சிகள் என சில நிமிடங்கள் வந்துபோனாலும் மனதில் நிறைகிறார்.

பொதுவாக கெளதமின் படங்களை மூன்று அத்தியாயங்களாக பிரிக்கலாம். முதல் அத்தியாயம் – ரொமாண்டிக்! மின்னலே, வாரணம் ஆயிரம், விடிவி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள். அத்தியாயம் இரண்டு – த்ரில்லர் ! காக்க காக்க , வேட்டையாடு விளையாடு, எனை அறிந்தால். அத்தியாயம் மூன்று – ரொமாண்டிக் த்ரில்லர்! அச்சம் என்பது மடமையாடா மற்றும் எனை நோக்கி பாயும்தோட்டா.

முந்தைய படங்களின் சாயல் அதிகமாக இந்தப் படத்தில் தெரிகிறது. புதுமையான காட்சிகள் இல்லையென்றாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறார். இரண்டரை மணிநேரம் ரசிகர்களை இருக்கையில் அமர்த்திவிடுகிறது படம். ஆனால் ஒவ்வொரு படத்திலும் கெளதம் தரும் சர்ப்ரைஸ் இதில் மிஸ்ஸிங். இறுதியாக, சிம்பு படத்தின் நேர்த்தியான வெர்ஷனாக தெரிகிறது தனுஷின் எனைநோக்கி பாயும்தோட்டா. படம் நெடுக வரும் தனுஷின் வாய்ஸ் ஓவர்… கொஞ்சம் ஓவர் டோஸ்!

பாடல்களில் மட்டுமல்ல, பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுபடுத்துகிறது தர்புகா சிவாவின் இசை. படத்துக்கு ஏற்ற பின்னணி, மறுவார்த்தை பேசாதேவின் விஸூவல் லுக் என இசையாலும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பாலும் படத்தின் தரம் உயர்கிறது.

இறுதியாக, கெளதம் ரசிகர்களை ரசிக்கவைக்கலாம். நடுநிலை ரசிகர்களுக்கு இந்த தோட்டாவின் தாக்கம் கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரத்துக்கான டென்ஷன் இல்லாத எண்டர்டெயின்மெண்டாக பெஸ்ட் சாய்ஸ் ‘எனைநோக்கி பாயும் தோட்டா’.

Related Posts