விமர்சனம்

இபிகோ 306 – திரைப்பட விமர்சனம்

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. 

இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை. 
காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். 

2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த இக்கொடும் நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் இபிகோ 306.

அனிதாவின் தற்கொலைக்கு முன் என்னவெல்லாம் நடந்திருக்கும்? என்பதைக் காட்சிப்படுத்தி நிகழ்வின் கொடூரத்தை உணரவைக்கிறது படம்.

படத்தில் மாணவி கோடீஸ்வரியாக நடித்திருக்கும் தாராபழனிவேல் நன்றாக நடித்திருக்கிறார். மனநலம் பிறழ்ந்தவருக்கு உணவிடும் கருணை, தம்பியிடம் காட்டும் பாசம், ஆரோக்கியம் நான் நல்லா இருக்கேன் என்று அப்பாவைச் சமாதானம் செய்வது கடைசியாக அம்மா படத்தின் முன் பேசும் சொற்கள் ஆகிய எல்லா இடங்களிலும்  கலங்க வைக்கிறார்.

அப்பாவாக நடித்திருக்கும் சீனுமோகன் முகபாவமே பாவப்பட்ட ஜென்மங்களின் பிரதிநிதியாக கண்முன் நிற்கிறது.

அரசியல் தலைவராக நடித்திருக்கிற சாய் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார். அய்யா அய்யா என்று அவர் பேசுவதும் அய்யாவுடனான உறவுமுறையும் வடமாவட்டங்களில் பிரபலமான கட்சியை நினைவூட்டுகிறது.

சோகம் ததும்பும் படத்துக்கேற்ப பாடல்களும் பின்னணி இசையும் அமைந்துள்ளன.சூரிய பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

செல்லப்பாவின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சாய் உணர்வுப்பூர்வமாக இயங்கியிருக்கிறார்.தகுதியிருந்தும் படிக்கவிடாமல் தடுக்கும் சட்டம் அதை வைத்துக் கொண்டு நடக்கும் அரசியல் விளையாட்டுகள், ஊடகங்களின் எண்ணம் ஆகியனவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மருத்துவக்கல்லூரி சேர்க்கைக் கட்டணமாகக் கிடைக்கும் வருமானத்தை விட நீட் பயிற்சி மையங்கள் அமைப்பதால் கிடைக்கும் வருமானம் பன்மடங்கு அதிகம் என்பதையும் அதற்காகவே வெளீயில் எதிர்த்து உள்ளுக்குள் நீட்டை ஆதரிக்கிறார்கள் என்பதையும் பட்டவர்த்தனமாகக் காட்டியிருக்கிறார்.

கல்வியில் அரசியலையும் வியாபாரத்தையும் கலக்காதீர்கள் அது தாய்ப்பாலில் விஷம் கலப்பதற்குச் சமம் என்கிற கருத்து நெஞ்சில் அறைகிறது.

திரைக்கதை மெதுவாகப் போனாலும் அது சொல்லும் செய்தி வேகமாக வந்து சேருகிறது.

Related Posts